பக்கம் எண் :

370தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

திருச்சிலுவை ஆலயத்தின் அருகில் ‘கலங்கரை விளக்கம்’
ஒன்று இந்திய அரசின் பொறுப்பில் செயல்பட்டு வருகிறது.

2. பரலோக மாதா ஆலயம்

புனித யாகப்பர் ஆலயம் இருக்கும் பகுதியில் முன்பு
பரலோக மாதா ஆலயம் இருந்தது எனப்படுகிறது.
போர்ச்சுக்கீசியரின் வீழ்ச்சியையடுத்து முத்துக்குளித்துறையில்
டச்சுக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பரலோகமாதா ஆலயம்
டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் இவ்வாலயத்தை
வெடி மருந்து வைக்கும் தலமாக ஆக்கினர். வீரமாமுனிவர்
கி.பி. 1746இல் மணப்பாட்டில் காலமான பொழுது, அவரது உடல்
பரலோகமாதா ஆலயத் தளத்தில் அடக்கம் செய்யப் பட்டதாகவும்,
இவ்வாலயத்தைப் பின் மணல் மூடிவிட்டதாகவும், கூறப்படுகிறது.
அழிவுற்ற இந்த ஆலயத்தின் கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு,
1852ஆம் ஆண்டில் பரிசுத்த ஆவிக்குச் சிற்றாலயம் எழுப்பப்பட்டது
என அறியப்படுகிறது.

3. புனித யாகப்பர் ஆலயம்

பரலோக மாதா ஆலயம் முதலில் இருந்த இடத்தில் புனித
யாகப்பர் ஆலயம் அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
கி.பி. 1685இல் இவ்வாலயம் எழுந்தது. கி.பி. 1745இல் அந்தோணி
துவார்த்து சுவாமிகள்
காலத்தில் இவ்வாலயம் அகலப்படுத்தப்
பட்டது. லூயிஸ் லாசூஸ் சுவாமிகள் பிளாசியுஸ், டிலிங்கர்
சுவாமிகள்
ஆகியோர் இவ்வாலயத்தை மேலும் விரிவுபடுத்த
முயன்றனர். தற்போது உள்ள ஆலயம் கி.பி. 1929இல் முழு
உருப்பெற்று, ரோச் ஆண்டகையால் அபிசேகம் செய்யப்பட்டது.
இவ்வாலயத்தின் அழகிய பலிபீடம் நெடிய கோபுரங்கள் ஆகியவை
யாவரும் வியக்கும்படி உள்ளன. இவ்வாலயத்தின் உயரே
காணப்படும் வண்ண ஓவியங்களைத் தீட்டியவர் கலைஞர்
மனுவேல் டிமெல் ஆவார். திருச்சிலுவைநாதரின்
திருச்சிலுவையினடியிலே நிற்கும் வியாகுல அன்னை,
புனித அருளப்பர், புனித மரிய மதலேன் ஆகிய சொரூபங்களை
மரத்தில் வடித்தவரும் கலைஞர் மனுவேல் டிமெல் ஆவார்.