மணப்பாட்டிலுள்ள கிறித்தவ ஆலயங்கள்
1. திருச்சிலுவைப் பேராலயம்
புனித சவேரியார் தங்கியிருந்த குகைக்குச் சிறிது உயரத்தில்,
மணப்பாட்டுக் குன்றின்மீது திருச்சிலுவைப் பேராலயம் உள்ளது.
‘பாரத நாட்டிலேயே திருச்சிலுவைக்கெனத் தனிச்சிறப்புப் பெற்று
விளங்கும்’ தலமாக மணப்பாடு உள்ளது.
கி.பி. 1540இல் போர்ச்சுக்கீசிய கப்பல் ஒன்றிற்கு நேர
இருந்த ஆபத்து நீங்கி, கப்பல் மணப்பாட்டிற்குச் சேதமின்றி
வந்து சேர்ந்ததாகவும், இக்கப்பலின் தலைவன், தனது
நேர்ச்சையின்படி கப்பலின் பாய்மரத்திலிருந்து வெட்டிய
சிலுவையை மணப்பாட்டுக் குன்றின்மீது நிறுவியதாகக் கூறப்படுகிறது.
கப்பல்தலைவனால் அமைக்கப்பட்ட சிலுவை யோடமைந்த
கூடாரத்தைப் புனித சவேரியார் தனது சிற்றாலயமாகப்
பயன்படுத்தினார். கப்பல்தலைவனது சிலுவையைத் தன்னகத்தே
கொண்டதாகத் திருச்சிலுவைப் பேராலயம் கி.பி. 1581இல்
கட்டப்பட்டது. ‘திருச்சிலுவையின் மகிமை விழா’ 1581முதல்
ஒவ்வோராண்டும் செப்டம்பர் 14ஆம் நாள் மணப்பாட்டில்
கொண்டாடப்பட்டு வருகிறது. 1583ஆம் ஆண்டு திருச்சிலுவை
‘மகிமை விழா’வின் பொழுது ‘மெய்யான சிலுவையின் ஒரு
துண்டு’ கிறித்தவர்களின் வணக்கத்திற்கு மணப்பாட்டில்
வைக்கப்பட்டது.
திருச்சிலுவை ஆலயத்தின் பலிபீடம் அழகுமிக்கது.
சிலுவைநாதரின் சொரூபம் ஜான்தேசல் நோவா
சுவாமியின்
முயற்சியால் கி.பி. 1584-85இல் மணிலா நகரிலிருந்து கொண்டு
வரப்பட்டதாகும். ஜோக்கீம் பர்னாந்து
சுவாமிகளால் இவ்வாலயம்
கி.பி. 1969இல் புதுப்பிக்கப்பட்டது.
மணப்பாட்டில் கொண்டாடப்படும் விழாக்களில் முதன்மை
வாய்ந்தது திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள் ஆகும்.
இத்திருநாளின் பொழுது, ஏராளமான மக்கள் இத்தலத்திற்கு
புனித யாத்திரையாக வருகின்றனர். கேரள மாநிலத்திலிருந்தும்
மக்கள் இங்கு வருகின்றனர்.
|