வளைகுடாக் கரையில், இயற்கை எழிலுடன் இவ்விடம்
அமைந்துள்ளது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில்
புகழ்பெற்று விளங்கிய கத்தோலிக்கக் கிறித்தவ மையங்களில்
மணப்பாடு ஒன்றாகும். மணப்பாட்டில் வாழ்ந்த பரதகுலத்தவர்கள்
கி.பி. சுமார் 1532ஆம் ஆண்டில், கத்தோலிக்கக், கிறித்தவ
சமயத்தைத் தழுவினர். கி.பி. 1542இல் மணப்பாடு வந்த
புனித
சவேரியார் முத்துக்குளித்துறை கடற்கரைப் பகுதியில் தமது
வேத போதக அலுவல்களுக்குத் தலைமை நிலையமாக
மணப்பாட்டை வைத்துக்கொண்டார். மணப்பாட்டிலுள்ள
குன்றின் கீழ்முனையில் கடலையடுத்து ஒரு குகை உள்ளது.
புனித சவேரியார் மணப்பாடு வந்தபொழுது இக்குகையில் ஒரு
சைவத்துறவி வசித்து வந்ததாகவும், அவர் இக்குகையைப்
புனித
சவேரியாருக்குக் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. “இந்தக்
குகையில்தான் புனித சவேரியார் வேதம் போதித்த காலத்தில்
அடிக்கடி ஜெபமும் தவமும் செய்து இதை அர்ச்சித்திருக்கிறார்”.
மணப்பாட்டில்தான் தமிழகத் திருச்சபைக்கு முதல் தமிழ்
ஜெபங்களைப் புனித சவேரியார் உருவாக்கினார்.
ஜான் சலேனோவா சுவாமிகள் முயற்சியால் கி.பி. 1583ஆம்
ஆண்டு, இயேசு எந்தச் சிலுவையில் அறையப்பட்டாரோ அந்தப்
புனிதச் சிலுவையினின்று வெட்டப்பட்ட ஒரு மரத்துண்டு (புனித
பண்டம்) போப்பாண்டவர் 13ஆம் கிரகோரியிடமிருந்து
பெறப்பட்டு மணப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
கி.பி. 1697 முதல் சிறிது காலம்
இயேசு சபையின்
தலைமை இல்லமாக மணப்பாடு இருந்தது. கி.பி.1744ஆம் ஆண்டு
முதல் வீரமாமுனிவர் இத்தலைமை இல்லத்தின் தலைவராகப்
பணிபுரிந்தார். கி.பி. 1746இல் வீரமாமுனிவர் மணப்பாட்டில்
காலமானார்.
‘சின்ன ஜெருசலம்’ என்றும்
‘ஓர் ஐரோப்பிய சிறுநகர்’
என்றும் வருணிக்கப்பட்ட மணப்பாடு இந்நாளிலும் கத்தோலிக்க
சமயத்திற்கு ஒரு சிறந்த தலமாகவும், கத்தோலிக்க மக்களின்
புனித யாத்திரைத் தலமாகவும் விளங்குகிறது.
|