பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்367

துறைமுகம் இன்று பழைய காயல் என்ற பெயரில் கடலிலிருந்து
3 கி.மீ. தொலைவில் ஒரு சிற்றூராக உள்ளது. பாண்டிய மன்னன்
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
(1268-1310) ஆட்சிக்
காலத்தில் மார்கோ போலோ என்ற வெனிஸ் நகரப் பயணி
பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். இவர் காயல்துறை
முகத்தைப் பார்வையிட்டு (கி.பி. 1292) அக்காலத்தில் காயல்
சிறந்த துறைமுகமாக விளங்கியது என்றும், காயலில் நடைபெற்ற
முத்துக்குளித்தல்பற்றியும், குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது
பற்றியும் இவர் பல குறிப்புகள் எழுதியுள்ளார். மேற்குத்
திசையிலிருந்து வந்த எல்லாக் கப்பல்களும் காயலுக்கு வந்தன
என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வாசப் என்ற அரேபிய அறிஞரும்
காயல் துறைமுகத்தின் வாணிபம்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடித் துறைமுகம்
சிறப்பெய்தியதால் கி.பி. 1937இல் காயல் துறைமுகம்
செயல்படுவது நிறுத்தப்பட்டது. தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய
மேலை நாட்டறிஞர் பேராயர் கால்டுவெல், இப்பகுதியை ஆய்ந்து
பல பழம் பொருள்களைக் கண்டார்.

திருச்செந்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் காயல்பட்டினம்
உள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் அரேபிய இஸ்லாமியர்களின்
முக்கிய குடியேற்றமாக இவ்விடம் ஆயிற்று. இன்றைய காயல்
பட்டினத்தின் சிறப்புமிக்க அம்சம் இங்குள்ள ‘மஹழறா’ என்ற
கட்டடமாகும். காதர் ஜு லானி நாயகம் என்ற பெரியாரின்
நினைவாக இது கி.பி. 1871இல் கட்டப்பட்டது.
கலைச்சிறப்புமிக்கது.

காயல்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில்,
திருச்செந்தூர் சாலையில் வீரபாண்டியன் பட்டணம் உள்ளது.
இங்குப் புனித தாமஸ் முனிவர் ஆலயம் உள்ளது. இது ஒரு
சிறப்புமிக்க கத்தோலிக்கக் கிறித்தவ ஆலயமாகும்.

மணப்பாடு: திருச்செந்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில்
(கன்னியாகுமரி சாலையில்) மணப்பாடு உள்ளது. இது ‘மணவை’
எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. மன்னார் வளைகுடாக்
கரையில், இயற்கை எழிலுடன் இவ்விடம்