இடையன்குடி
உவரியிலிருந்து 3 கி.மீ தொலைவில்
இடையன்குடி
உள்ளது. தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய மேலைநாட்டு
அறிஞர்களில் புகழ்மிக்க ஒருவர் டாக்டர் கால்டுவெல் (1815-1891)
ஆவார். டாக்டர் கால்டுவெல் சுமார் 40 ஆண்டுகள்
இடையன்குடியில் தங்கிச் சீர்திருத்தக் கிறித்தவ சமயத்தைப்
பரப்பினார். இவ்வூரில் இவர் அமைத்த தேவாலயம் உள்ளது.
இது இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ தேவாலயத்தின்
அமைப்பைப் பெற்றுள்ளது என்பர். டாக்டர் கால்டுவெல்
இடையன்குடியில் ஆற்றிய கல்விப்பணி போற்றற்குரியது.
இடையன்குடியில் இவர் வாழ்ந்த காலத்தில் ‘திருநெல்வேலியின்
வரலாறு’ என்ற சிறந்த நூலை எழுதி வெளியிட்டார் (கி.பி.1881).
இவரது புலமைக்குச் சிறந்த சான்றாக விளங்குவது ‘திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம்’ ஆகும்.
கி.பி. 1891இல் டாக்டர் கால்டுவெல் கொடைக்கானலில்
காலமானார். இவரது உடல் இடையன்குடிக்குக் கொண்டு வரப்பட்டு
இங்கு இவரமைத்த கிறித்தவ ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவர் மனைவி எலைசாவின் உடலும் இவ்வாலயத்தில் அடக்கம்
செய்யப்பட்டது.
கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணிக்காகத் தமிழ்நாட்டிற்கு
வந்த போதிலும், டாக்டர் கால்டுவெல் தமிழ் மக்களுக்கு
ஆற்றிய கல்விப்பணி, வரலாற்றிற்கும் தமிழ்மொழிக்கும் புரிந்த
தொண்டு சாலச்சிறந்தனவாம் கிறித்தவ சமயம் தமிழ்நாட்டில்
திருநெல்வேலி மாவட்டத்தைப்போல் வேறு எங்கும் சிறப்பாகக்
கால் கொள்ளவில்லை என்பர். இச்சிறப்புக்குக் காரணமானவர்களில்
ஒருவர் பெல் பாஸ்டின் டாக்டர் கால்டுவெல் ஆவார். டாக்டர்
கால்டுவெல் அவர்களின் பெருமையை என்றும் கூறும்வண்ணம்
இடையன்குடி உள்ளது.
இடையன்குடியை அடுத்துள்ள திசையன்விளை ஒரு
கத்தோலிக்க மையமாகும்.
|