பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்379

திருச்சாரண மலை ஒரு காலத்தில் ஒரு சிறந்த சமண
மையமாகத் திகழ்ந்தது. சமணப் பெரியார்கள் இம்மலையில் தங்கி
சமண அறத்தை மக்களுக்குப் பரப்பினர். இவர்கள் இங்குள்ள
மலையின் உச்சியில் ஒரு சமணர் கோவிலையும் பல சமண
சிற்பங்களையும் உண்டாக்கியுள்ளனர். மலைப்பாறையை
அடுத்துக் கட்டப்பட்ட ஒரு கற்கோவிலாக, இச்சமணர் கோவில்
காட்சியளிக்கிறது. மூலவர் மகாவீரர் ஆவார். அவரது இடப்
பக்கம் பார்சுவ நாதர் உள்ளார். மகாவீரரின் வலப்பக்கம் உள்ள
அறையில் பகவதி அம்மனின் சந்நிதி உள்ளது. இக்கோவில்
திருவாங்கூர் மன்னர் காலத்தில் கி.பி. 1913ஆம் ஆண்டு
புதுப்பிக்கப்பட்டு அம்மனின் உருவம் வழிபாட்டிற்கு
வைக்கப்பட்டது. கோவிலுக்கு வெளியில், தெற்கிலுள்ள ஒரு
பாறையில் மகாவீரரின் ஒரு சிலை உள்ளது.

கோவிலுக்கு வடக்கில் மலைப்பாறையின் மேல்வரிசையில்
12 தீர்த்தங்கரர் உருவங்களும், கீழ் வரிசையில் நேமிநாதர்,
பார்சுவநாதர், மகாவீரர் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும்
வடிக்கப்பட்டுள்ளன. சமணத் தீர்த்தங்கரர்களின் திருவுருங்கள்,
நின்ற நிலை அல்லது அமர்ந்த நிலையில் உள்ளன.
பத்மாவதியின் உருவமும் உள்ளது. கி.பி. 9ஆம் நூற்றாண்டில்
மதுரைப் பகுதியிலுள்ள சமண உருவங்கள் சிலவற்றை அமைத்த
அச்சணந்திப் பெரியாரும் இதர சிலரும் திருச்சாரண
மலையிலுள்ள சிற்பங்களை அமைத்துள்ளனர். மதுரையை
அடுத்த குன்றுகள், கழுகுமலை முதலிய இடங்களில் சமணத்
திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருந்தாலும்,
திருச்சாரண மலையிலுள்ள சமணத் திருவுருவங்களுக்குக்
கட்டுமான கற்கோவிலும், தாழ்வாரமும் கட்டப்பட்டுள்ளது
ஒரு சிறப்பாகும்.

திருச்சாரண மலையின் உச்சியை அடைவதில் ஏற்படும்
களைப்பு அங்குக் கிடைக்கும் சமணச் சிற்ப விருந்தில் மறைகிறது!

திருச்சாரண மலை சமணர் கோவிலும், சமணச் சிற்பங்களும்,
சமணப் பெரியார்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச்
செல்வங்களாகும்.