பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்39

ஆங்கிலேயர் செயலாற்றினார். இக்காட்சிக் கூடத்தில்
தொல்பொருள்துறை, உயிரியல், புவி இயல், நாணய இயல்,
ஆயுதத்துறை முதலிய பல துறைகளிலிருந்து எண்ணற்ற
பொருள்கள் சேகரிக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அமராவதி புத்த சிற்பங்கள், அழகிய பல இந்து சமயச் சிற்பங்கள்,
மொகஞ்சதாரோவில் கிடைத்த பண்டைய பொருள்களின் மாதிரிகள்,
18 மீட்டர் நீளமுள்ள ஒரு திமிங்கலத்தின் எலும்புக்கூடு, பலவகைப்
போர்க்கருவிகள், ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள், பண்டைய
நாணயங்கள் முதலிய பல அரிய பொருள்கள் காட்சிக்கூடத்தில்
இடம் பெற்றுள்ளன. படிமக்கூடத்தில் ஏராளமான செப்புத்
திருமேனிகள் உள்ளன. கலைக்கூடம் அமைந்துள்ள
‘விக்டோரியா நினைவுக் கட்டடம்’ கட்டடக்கலைச் சிறப்பு
மிக்கது. கலைக்கூடம் அருகில் கன்னிமாரா நூலகம் உள்ளது.

வள்ளுவர் கோட்டம்

தமிழ்ப் புலவர்களில் தலைசிறந்தவர் என்று கருதப்படுபவர்
திருவள்ளுவர் ஆவார். இவர் திருக்குறள் என்ற ஒப்பற்ற நூலை
எழுதிப் புகழ் பெற்றுள்ளார். இவர் மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்பர்.
திருவள்ளுவரின் நினைவாகச் சென்னை நுங்கம்பாகத்தில்
‘வள்ளுவர் கோட்டம்’ அமைக்கப்பட்டுள்ளது. இது
கி.பி. 1973ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்குள்ள
கட்டடத்தின் மாடிப்பகுதிச் சுவர்களில் 1330 குறட்பாக்கள்
அழகாகக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

வள்ளுவர் கோட்டத்தின் சிறப்பான அம்சம் இங்குள்ள
மிகப்பெரிய கல் ரதம் ஆகும். முற்றிலும் கல்லினாலான இந்த
இரதத்தின் உச்சியில் திருவள்ளுவரின் அழகிய உருவம்
காட்சியளிக்கிறது. இரதத்தில் பெரிய சக்கரங்கள் நேர்த்தியாக
வடிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்திலுள்ள கல் ரதம்
இதை அமைக்கக் காரணமாயிருந்த தி.மு.க. அரசின்
(1967-1976) பெருமைக்கு ஒரு சான்றாகவும், தற்காலச்
சிற்பக்கலைத் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும்
விளங்குகிறது.