பக்கம் எண் :

40தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சென்னை நகரிலுள்ள இந்துக் கோவில்கள்

பார்த்தசாரதி சுவாமி கோவில்

சென்னை நகரில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி
சுவாமி கோவில்
உள்ளது. இது தொண்டை நாட்டின் வைணவத்
திருப்பதிகளில் முக்கிய ஒன்றாகும். ஆழ்வார்களால் பாடப்பெற்ற
தலமாக இருப்பதால், கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்கும் முன்னதாகவே
இக்கோவில் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
தந்திவர்மன்
என்ற பல்லவ மன்னன் (775-825) காலத்தில்
சிறியதாக இருந்த இக்கோவில் பெரியதாகக் கட்டப்பட்டது
என்று ‘தந்திவர்மன் சாசனம்’ (கி.பி.789) மூலம் அறியப்படுகிறது.
சோழர்காலக் கல்வெட்டு ஒன்று மூன்றாம் குலோத்துங்கன்
(1178-1216) இக்கோவிலுக்கு அளித்த கொடையையும், மெய்க்
கீர்த்தியையும் குறிக்கிறது. இக்கோவிலிலுள்ள மற்றொரு
கல்வெட்டுமூலம் விஜயநகரப் பேரரசர் சதாசிவராயர் காலத்தில்
(1542-1576) தனி நபர் ஒருவர் இக்கோவிலில் வேதவல்லி
நாச்சியாருக்கு
ஒரு சந்நிதியையும், திருமதிலையும், இதர
சில பகுதிகளையும் அமைத்தார் (1564) என்றும் அறியப்படுகிறது.
மற்றொரு கல்வெட்டு விஜயநகர மன்னர் வேங்கடபதிராஜு வின்
அமைச்சர் திருமலைராயர் அளித்த கொடையைக் குறிக்கிறது
இரண்டாம் வெங்கடன்
(1586-1614) என்ற விஜயநகர மன்னர்
காலத்துக் கல்வெட்டுமூலம் ஸ்ரீராமானுஜருக்கு இங்கு ஆலயம்
எழுப்பப்பட்டது என அறியப்படுகிறது.

கருவறையில், ஸ்ரீவெங்கடகிருஷ்ணசுவாமியின் அழகிய
திருவுருவத்தையும், ஸ்ரீருக்மிணிதேவி, பலராமர், சாத்யகி,
பிரத்யும்னர், அநிருத்தர்
ஆகிய திருவுருவங்களையும் காணலாம்.
தாயார் வேதவல்லி எனப்படுகிறார்.

ஸ்ரீரங்கநாதர் சந்நிதி, இராமபிரான் சந்நிதி, ஸ்ரீஇராமானுஜர்
சந்நிதி, ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி, முக்கிய ஆழ்வார்களின்
சந்நிதிகள் ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன.