வேலூர் நகரின் மற்றொரு முக்கிய அம்சம் நீண்ட
காலமாகப் புகழ்பெற்ற கிறித்தவ மருத்துவ நிலையம்
ஆகும். இது இடாஸ்குட்டர் என்ற அமெரிக்கப்
பெண்மணியால் தோற்றுவிக்கப்பட்டதாகும். தமிழ்நாட்டின்
முக்கிய மருத்துவத் தலமாக இது விளங்குகிறது.
விரிஞ்சிபுரம் : வேலூர் நகரிலிருந்து 11 கி.மீ.
தொலைவில் விரிஞ்சிபுரம் உள்ளது. இங்கு மார்க்கசகாயர்
கோவில் உள்ளது. விரிஞ்சிபுரத்தில் நான்முகன் சிவனை
வழிபட்டதாகப் புராண வாயிலாக அறியப்படுகிறது. இரண்டாம்
குலோத்துங்க சோழனின் பிரதிநிதியான இராஜராஜ
சாம்புவராயரால் இக்கோயில் கி.பி. 13ஆம்
நூற்றாண்டில்
கட்டப்பட்டது.
விஜய நகரப் பேரரசர்
கிருஷ்ணதேவராயரால்
(1509-1529) இக்கோயிலின் இராய கோபுரம் கட்டப்பட்டது.
விரிஞ்சிபுரக் கோவிலின் கல்யாண மண்டபம், வசந்த
மண்டபம் ஆகியவற்றில் அழகிய கற்றூண் சிற்பங்கள்
உள்ளன. வேலூரிலுள்ள ஜலகண்டேசுவரர் கோவிலின்
கல்யாண மண்டபத்தைக் கட்டிய நாயக்க தலைவர்களே
விரிஞ்சிபுரக் கோவில் மண்டபங்களையும் கட்டியிருக்க
வேண்டும் என்று கருதப்படுகிறது.
கோவிலிலுள்ள மதிலின் ஒரு வரிசையில் அழகிய
சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறைகளில்
மார்க்க
சகாயரும் மரகதவல்லியும் காட்சி தருகின்றனர்.
|