வேலூர்க் கோட்டையின் உட்பகுதியில் ஒரு மசூதியும்
கிறித்தவ ஆலயமும் உள்ளன. கோட்டைப் பகுதியில் வேலூர்
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களும் நீதிமன்றங்களும்
இதர சில அலுவலகங்களும் உள்ளன.
வேலூர்க் கோட்டையின் உட்பகுதியில் உள்ள நமது
பண்பாட்டின் சின்னம் ஜலகண்டீஸ்வரர் கோவில் ஆகும்.
இக்கோவிலின் சில பகுதிகள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில்
வேலூரை ஆட்சிப் புரிந்த சின்ன பொம்ம நாயக்கர்
என்பவரால் கட்டப்பட்டன. பிற்கால விஜயநகரக்
கலையம்சத்தை இக்கோவில் கொண்டுள்ளது. பீஜப்பூர்,
மராத்தியப் படையெடுப்புகளினால் இக்கோவில் சிதைவுற்றுக்
கருவறைத் தெய்வங்கள் அகற்றப்பட்டனவாகத் தெரிகிறது. நீண்ட
காலமாக வழிபாடற்ற நிலையிலிருந்த இக்கோவில்
இந்தியத்
தொல் பொருள் துறையினரின் (ASI) பாதுகாப்பில்
உள்ளது. இவ்வாலயத்திலுள்ள கல்யாண மண்டபம் ஒரு
உன்னதக் கலைப் படைப்பு ஆகும். இம்மண்டபத்திலுள்ள
கற்றூண்களில் வடிக்கப்பட்டுள்ள குதிரை வீரர்களின்
சிற்பங்கள் யாவும் சிறந்த கலைக் கருவூலங்களாகும்.
நீண்ட காலமாக வழிபாடற்ற
நிலையிலிருந்த
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 1981, மார்ச்முதல் வழிபாடு
நடைபெற்று வருகிறது. வேலூர் நகரத்திலுள்ள சிலரது
ஆர்வத்தினால் இது நிறைவேறியுள்ளது. வேலூர் நகரை
அடுத்துள்ள ஒரு கிராமத்திலிருந்து இறைவனது உருவமும்
இறைவியின் உருவமும் கொண்டுவரப்பட்டு இக்கோவிலின்
கருவறைகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மீண்டும் வழிபாடு
மேற்கொள்ளப்பட்டது. வேலூர் நகர வரலாற்றில்
குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும்.
வேலூர் நகர்ப்பகுதியில் தமிழ்நாட்டிலேயே பெரிய
சிறைச்சாலை உள்ளது. இங்குப் பெண்களுக்கு எனத் தனியாக
ஒரு சிறை உள்ளது.
|