பக்கம் எண் :

84தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

அனுப்பினார். ஆர்க்காட்டு முற்றுகை (1751) சுமார் 2 மாதங்கள்
நடந்தது. ஒருபுறம் கிளைவின் சிறுபடை-200 ஐரோப்பியர்கள்,
300 இந்தியச் சிப்பாய்கள், மற்றொரு புறம் இராஜா சாகிப்பின்
பெரிய படை-சுமார் 700 படைவீரர்கள், 300 குதிரை வீரர்கள்,
120 பிரெஞ்சுக்காரர்கள்; ஆனால், ஆர்க்காட்டு முற்றுகையில்
கிளைவ் தமது போர்த்திறமையினால் தமது சிறிய படையைக்
கொண்டு வெற்றி பெற்றார். பின் ஆங்கிலேயர்கள் திருச்சி
முற்றுகையையும் விடுவித்து முகமதலியை ஆர்க்காட்டின்
நவாபாக ஆக்கினர். ‘டில்லி வாயிலின்’ சுவரில் கி.பி. 1751இல்
கிளைவ் ஆர்க்காட்டை முற்றுகையிட்டு வெற்றி பெற்றதைக் கூறும்
சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. டில்லி வாயிலின் மேலுள்ள
அறையில் இராபர்ட் கிளைவ் தங்கியிருந்தார் என்று
கூறப்படுகிறது.

கி.பி. 1751ஆம் வருட ஆர்க்காட்டு முற்றுகைக்குப் பின்
பல முறை ஆர்க்காட்டின் கோட்டை தாக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது கர்நாடகப் போரின் பொழுது பிரெஞ்சுத் தளபதி
லாலி ஆர்க்காட்டைப் பிடித்தார் (1758). ஆனால், ஆங்கிலத்
தளபதி சர் அயர் கூட் ஆர்க்காட்டைப் பிரெஞ்சுக்காரரிடமிருந்து
மீட்டார் (1760). இரண்டாவது மைசூர்ப் போரின்பொழுது (1780)
மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆர்க்காட்டைப் பிடித்தார்.
கி.பி. 1782 வரை ஆர்க்காடு ஹைதர்வசம் இருந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்க்காட்டின் கோட்டையில்
‘டில்லி வாயில்’ மட்டும் எஞ்சியுள்ளது. வரலாற்றுச் சிறப்பு
மிக்க இவ்வாயிலை நாம் நன்கு பாதுகாத்திட வேண்டும்.

டில்லி வாயிலிலிருந்து சிறிது தொலைவில் ஆர்க்காட்டு
நவாபுகள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சியப் பகுதிகள் சில
உள்ளன. கி.பி. 1811இல் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம்
கோட்டைப் பகுதியையும் நவாப் மாளிகையையும் பெரிதும்
சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. மாளிகையின் சிதைவுற்ற
பகுதிகளுக்கு அருகில் நவாப் சாதத் உல்லாகானின் கல்லறை
உள்ளது. அழகிய கட்டட அமைப்பைக்கொண்ட இக்கல்லறை