1. தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள் இந்திய வரலாறும் தென்னிந்திய வரலாறும் இதுவரை பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுவந்துள்ளன. தமிழில் வெளியாகியுள்ள வரலாறுகள் ஆங்கில மொழியில் வெளிவந்துள்ள வரலாற்று நூல்களின் மொழபெயர்ப்பாகவோ அன்றித் தழுவல்களாகவோ அமைந்துள்ளன. தமிழ்நாடு தனியொரு மாநிலமாகப் பிரந்த பிறகும் அதன் வரலாறு தமிழில் வெளியாகவில்லை. அக் குறையைத் தவிர்க்கும் பொருட்டே இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. தமிழரின் மரபும், பண்பாடும், தமிழ் மொழியும் காலச் சுழல்களில் சிக்குண்டும், அந்நியக் கலப்புகள் பலவற்றுக்கு உட்பட்டும் சில மாறுதல்களை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டு வரலாற்றைத் தனிப்பட்டதொன்றெனக் கருதாமல் இந்திய வரலாற்றுடன் பிணைந்திருப்பதாகவே கொள்ளவேண்டியுள்ளது. வரலாறு கண்ட உண்மைகளைப் புறக்கணிக்காமல் உண்மையை நாடி, நாட்டின் வரலாற்றை உருவாக்குவது தேவை. அஃதேயன்றிப் பழந்தமிழகத்தின் வரலாறானது பண்டைய எகிப்து, பாபிலோனியா, சுமேரியா, ரோம், கிரீசு ஆகிய நாடுகளின் வரலாறுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. பண்டைய நாள்களில், பொதுவாக இந்தியாவிலும், சிறப்பாகத் தமிழகத்திலும் வரலாற்று நிகழ்ச்சிகளை ஏடுகளில் எழுதி வைக்கும் வழக்கத்தை மக்கள் மேற்கொண்டிலர். மிகச் சிறந்த இலக்கியங்களையும் உரைகளையும் படைத்துக் கொடுத்த பழந்தமிழர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துவைக்காமற் போனது வியப்பினும் வியப்பாக உள்ளது. இக் காரணத்தால் வரலாற்று ஆசிரியர்கள் தமிழரின் வரலாறு ஒன்றை எழுதுவதில் பல இடுக்கண்களுக்குட்பட்டு வந்துள்ளனர். ஆழ்ந்த ஆராய்ச்சியின் பயனாய்த் தமிழகத்தின் வரலாறுகள் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. பழந்தமிழர்கள் வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச் செல்லவில்லையே ஒழிய அவர்களுடைய வாழ்க்கைகளைப் பற்றிய புதைபொருட் சின்னங்கள், இலக்கியக் குறிப்புகள் ஆகியவை மிகுதியாகவே நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றைக் |