முஸ்லிம் பயணியின் பயணக் குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய செய்திகளைக் கொண்டு கோவையான வரலாற்றை எழுதக்கூடும். பிற்காலம் : கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்தது முதல் தற்காலம்வரையிலான காலப் பகுதியைப் பிற்காலம் என்று குறிப்பிடுகின்றோம். இந்தியாவுடன் வாணிகம் செய்யவந்த ஐரோப்பியக் கம்பெனிகளின் ஆவணங்கள், பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்களின் ஆவணங்கள், ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு, சிலரின் வாழ்க்கை வரலாறுகள் முதலியவை வரலாற்றுக் களஞ்சியங்களாக உதவுகின்றன. இவையேயன்றி, ராபர்ட் ஆர்மி (Orme) எழுதிவைத்த ‘இராணுவ நடவடிக்கைகள்’ என்னும் நூலும், மக்கன்ஸியின் கையேட்டுப் படிகளும் 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் அரசியல், சமுதாய நிலைகளை அறிந்து கொள்வதற்குப் பயன்படுகின்றன. இவ் வெளிநாட்டு அறிஞர்கள் செவிவழிக் கேட்டவற்றை ஒட்டி எழுதியுள்ளவை யாவற்றையும் நம்ப முடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் குறிப்புச் சுவடிகள் (Gazetteers) வெளியிடப்பட்டன. இங்கிலாந்திலுள்ள அரசு ஆவணக்களரியிலும், சென்னையிலுள்ள அரசு ஆவணக்களரியிலும் (Record Office) உள்ள பல கையேட்டுச் சுவடிகள் அண்மைக்காலத்தின் வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கப் பட்டுள்ளன. பாரத நாடு விடுதலை பெற்ற பின் அரசாங்க ஆவணங்கள் மிகப் பயன்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது அதன் வரலாறு நூல்களிலும், செய்தித்தாள்களிலும் எழுதப்பட்டு வருகின்றன. தந்தியும், தொலைபேசியும், புகைப்படம் எடுக்கும் கருவிகளும், வானொலியும், தமிழக வரலாறு நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே அவற்றைப் பதிவு செய்துவைக்கத் துணைபுரிந்து வருகின்றன. நாகரிகமும் பண்பாடும் உலக நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உண்டு. மக்கள் சமுதாயத்தைப்பற்றிய செய்திகள் வரலாற்று நூல்களில் இடம் பெறும். அண்மைக் காலம் வரையில் மன்னர்களைப் பற்றிய செய்திகள் மட்டும் வரலாற்று நூல்களில் இடம் பெற்று |