சீனத்துக்கு அனுப்பப்பட்ட சோழரின் தூதுகளைப் பற்றிய குறிப்புகள் சீன நாட்டின் ‘சாங்’ வரலாறுகளில் கிடைக்கின்றன. இவை முதலாம் இராசராசன், முதலாம் குலோத்துங்கன் ஆகிய மன்னரின் காலத்தவை. சீனப் பயணியான சா-ஜூ-குவா (கி.பி. 1225) இச் செய்திகளை மெய்ப்பித்துள்ளார். அராபிய எழுத்தாளரான இபுனே ஹாக்கால், ஈஸ்டாக்கி என்பவர்கள் தமிழகம் அரபு நாடுகளுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்புகளைத் தம் நூல்களில் எடுத்துக் கூறியுள்ளனர். சிங்களத்து வரலாற்று நூலான மகாவமிசத்திலும் தமிழகத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. வெனிஸ் பயணி மார்க்கோ போலோ (சுமார் கி.பி. 1293) தென்னிந்தியாவைப் பற்றித் தரும் செய்திகள் வியக்கத்தக்கனவாம். சோழர் காலத்தில் பொன் நாணயங்களும் இதர நாணயங்களும் வெளியிடப்பட்டன. உத்தம சோழன், இரண்டாம் ஆதித்தன், முதலாம் இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன் முதலிய சோழ மன்னரின் நாணயங்கள் பல கிடைத்துள்ளன. சோழர் காலத்திய கல்வெட்டுகளில் பல நாணயங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் பல இப்போது கிடைக்கவில்லை. சோழர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும் புகழ் பெற்ற கோயில்கள் பல எழுப்பப்பட்டன ; பல கோயில்கள் விரிவாக்கப்பட்டன. இசையும் நாட்டியக் கலையும் மிக உயர்நிலையை எட்டிப்பிடித்திருந்தன. ஓவியம், சிற்பம் ஆகிய கலைகள் அப்போது அடைந்திருந்த சீரும் சிறப்பும் என்றுமே எய்தியிருந்தனவல்ல என்று திட்டமாகக் கூறலாம். குறிப்பாகச் சோழர் காலத்துக் கோயில்களின் அமைப்பு, படிவங்களின் சிறப்புகள் முதலியவற்றைப் பற்றியும் நன்கு அறிய முடிகின்றது. மத்திய காலம் : விசயநகரப் பேரரசின் எழுச்சியும் முடிவும், மதுரைப் பாண்டியரின் வீழ்ச்சியும், மதுரை நாயக்கர் ஆட்சியின் தோற்றமும் முடிவும் மத்திய காலம் என்ற பகுப்பில் அடங்குகின்றன. இக்காலத்திய அரசியல், சமய நிலை, சமூக நிலை, கலை வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் நமக்குப் பல துறைகளில் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், இலக்கியங்கள், கிறித்தவப் பாதிரிமாரின் அறிக்கைகள், கடிதங்கள், கங்காதேவியின் ‘மதுரா விசயம்’, கொங்கு தேச இராசாக்களின் சரித்திரம், இபின் பத்துதா (1304-78) என்ற |