தமிழ் இலக்கியப் படைப்புகள், தேவாரப் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள், சிற்பங்கள், சுவரோவியங்கள், பண்ணிசைக் குறிப்புகள் ஆகியவை அக்காலத்தைப் பற்றிய செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன. ஹியூன்சாங் என்ற சீனப் பயணியின் பயணக் குறிப்புகளில் (கி.பி. 641-2) பல்லவர் காலத்தைப் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. பாண்டிய சோழப் பேரரசுக் காலம் : இக்காலத்திய தமிழகத்து வரலாற்றை ஆராய்ந்து கோவைப்பட எழுதுவதற்கு எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேட்டுப் பட்டயங்கள், நடுகற்கள், தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், கோயிற் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள், மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், சீனம், அரேபிய நாட்டு மொழி நூல்கள் சிலவற்றுள் காணப்படும் குறிப்புகள் நமக்குத் துணைபுரிகின்றன. செப்பேட்டுப் பட்டயங்களில் லீடன் பட்டயங்கள், திருவாலங்காட்டுப் பட்டயங்கள், கரந்தைப் பட்டயங்கள், சாரளாப் பட்டயங்கள் சிறப்பானவை. கல்வெட்டுகள் அளிக்கும் செய்திகளின் வரலாற்று மதிப்பை அளவிட முடியாது. தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகளும், திருமுக்கூடல், உத்திரமேரூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளும், மன்னர்கள், மக்கள் ஆகியவர்களின் வாழ்க்கையைத் தெற்றென எடுத்துக்காட்டுகின்றன. சோழ மன்னர்களின் வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் சிங்களத்திலும், சாவகத்திலும், சுமத்திராவிலும், பர்மாவிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சீனத்தில் சுவான்சௌ என்னும் ஊரில் ஒரு கோயிலில் கசேந்திர மோட்சம், உரலில் பிணிக்கப்பட்ட கண்ணன் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. வரலாற்றுத் தொடர்புடைய தமிழ் இலக்கியங்களுள் கலிங்கத்துப் பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்கன் கோவை, பெரிய புராணம், வைணவ மரபையொட்டிய குருபரம்பரை, சீரங்கம் கோயிலொழுகு, மதுரைத் தல வரலாறு, கேரளோற்பத்தி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால், இவையனைத்தும் நம்பக்கூடியனவென்றோ வரலாற்றுக்குப் பயன் உடையவை என்றோ கருத முடியாது. அவற்றுள் காணப்படும் சிற்சில கருத்துகள் வரலாற்றுப் பயன் உடையவையாம். சீனக் கடலோரத்திலும் பாரசீக வளைகுடாவிலும் தமிழக வணிகரின் குடியிருப்புகள் அமைந்திருக்கவேண்டும் என அறிகின்றோம். |