தொடர்புகள், சமுதாயத்தில் காணப்படும் மக்களினப் பிரிவுகள், மொழி வளர்ச்சி, இலக்கியம், கலைகள் ஆகியவற்றின் வளர்ச்சி, பொருள் பெருக்கம், அரசியல் ஆக்கம், குடிமக்கள் உண்ணும் உணவு, அணியும் ஆடை, பூணும் அணிகள், அவர்களுடைய ஒழுக்கங்கள், சமயங்கள், குடிநலக் கூறுகளான நல்வாழ்வுக் கழகங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கூறவும் வரலாறுகள் இப்போது முனைந்து வருகின்றன. நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியில், உலக வரலாற்றில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள பங்கை ஆய்ந்து விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான ஒன்றாகும். பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரீசு, ரோம் ஆகிய நாடுகள் நாகரிகத்தில் மிகவும் சிறந்து விளங்கிய பண்டைக் காலத்திலேயே தமக்கென ஒரு நாகரிகத்தையும் சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே வரலாற்று ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில் ஆர்.ஜி. பந்தர்க்கார் என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார். அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை. இக் குறைபாட்டை வின்சென்டு ஸ்மித் போன்ற வரலாற்றாசிரியர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள். இந்திய வரலாற்று நூல்களில் தமிழ்நாட்டைப்பற்றிய செய்திகளைக் கூறாமல் புறக்கணித்து வந்ததற்குச் சில காரணங்கள் கூறப்பட்டன. வட இந்தியாவைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்தே கிடைத்திருக்கின்றனவென்றும், அதைப்போலத் தென்னிந்தியாவைப் பற்றிய சான்றுகள் ஏதும் கிடைக்க வில்லையாதலால் பொருத்தமான தென்னிந்திய வரலாறு ஒன்று எழுதுவதில் பல இன்னல்கள் உள்ளனவென்றும் வரலாற்றாசிரியர்கள் கூறிவந்தனர். இவர்கள் காட்டும் காரணம் உண்மைக்குப் புறம்பானதாகும். ஒரு நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கு அந் நாட்டில் எழுந்துள்ள இலக்கியப் படைப்புகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், புதைபொருள்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள், சமயக் கோட்பாடுகள் ஆகியவை சான்றுகளாக உதவி வந்துள்ளன. இச் சான்றுகள் அத்தனையும் தமிழகத்திலும் பெருமளவு கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டே தமிழ்நாட்டின் வரலாற்றைத் தொடர்ச்சியாகவும் விளக்கமாகவும் எழுதக்கூடும். சென்ற ஐம்பது ஆண்டுகளில் இச் சான்றுகளைக் |