பக்கம் எண் :

தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்13

கொண்டு எழுதப்பட்ட தமிழக வரலாறுகள் சில வெளிவந்துள்ளன.

     இந்தியாவிலேயே மிகப் பெருந்தொகையில் கல்வெட்டுகள் கிடைப்பது
தமிழ்நாட்டில்தான். தமிழ்நாட்டில் இதுவரையில் வெளியாகியுள்ள கல்வெட்டுச்
செய்திகளைக் கொண்டும், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சான்றுகளைக்
கொண்டும், பண்டைய கிரீசு, ரோம், எகிப்து, சீனம் ஆகிய நாட்டு வரலாற்று
இலக்கியத்தில் தமிழரைப்பற்றிக் கிடைக்கும் சில குறிப்புகளைக் கொண்டும்
தமிழக வரலாற்று ஆசிரியர்கள் விளக்கமான வரலாறுகளை இப்போது எழுதி
வருகின்றனர். தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இதுவரை
வெளியிடப்பட்டவை சிலவே. இன்னும் பல்லாயிரம் கல்வெட்டுகள்
வெளிவராமல் கல்வெட்டுச் சாசன ஆய்வகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன.
அவையும் பதிப்பில் வருமாயின் தமிழ் மக்களின் வரலாறு மிகவும் விரிவாக
எழுதப்படலாம் என்பதற்கு ஐயம் ஏதுமில்லை.

     ‘விஞ்ஞான முறையில் இந்திய வரலாறு ஒன்றை எழுதப் புகும்
ஆசிரியர்கள் கிருஷ்ணா, காவிரி, வைகை ஆற்றங்கரைகளில்தாம் முதன்முதல்
தம் ஆராய்ச்சிகளைத் தொடங்க வேண்டுமே அன்றிக் கங்கைக் கரையினின்று.
. . . ...’ என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதுகின்றார். இந்தியாவில்
தோன்றி வளர்ந்து வந்துள்ள பல்வேறுபட்ட நாகரிகங்கள் ஒன்றோடொன்று
தொடர்புடையவை. இந்தியாவை வட இந்தியாவென்றும் தென்னிந்தியா
வென்றும் பிரித்து, ஒன்றைச் சிறப்பித்து மற்றொன்றைப் புறக்கணித்தல்
வரலாற்றைப் பொய்ப்பிக்க முயல்வதாகும். இந்திய வரலாற்றாராய்ச்சியைத்
தென்னிந்தியாவில்தான் தொடங்கவேண்டும் என்பது இக்கால
வரலாற்றாசிரியர்கள் அனைவருக்கும் உடன்பாடாகும். எனவே, இதுவரை
கிடைத்துள்ள பல்வேறு சான்றுகளைக் கொண்டு தமிழகத்தின் வரலாறும்,
தமிழரின் சால்புகளைப் பற்றிய செய்திகளும் பின்வரும் இயல்களில்
தொகுத்தளிக்கப் படுகின்றன.