2. தமிழகத்தின் இயற்கை அமைப்புகள் விந்தியமலைத் தொடரும், சாத்பூராமலைத் தொடரும் ஆழ்ந்த நருமதைப் பள்ளத்தாக்கும், தபதியாறும், தண்ட காரணியக் காடுகளும் வட இந்தியாவென்றும் தென்னிந்தியாவென்றும் இந்தியாவை இரு பகுதிகளாகப் பிரித்து நிற்கின்றன. வடஇந்தியாவில் கைபர், போலன் கணவாய்களின் மூலம் அன்னியரின் படையெடுப்புகள் பல நேர்ந்துள்ளன. அவற்றின் மூலம் அங்கு மக்களின் இனக்கலப்பும், அரசியல் திருப்பங்களும், ஒழுக்கம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றில் மாற்றங்களும் பெருவாரியாக ஏற்பட்டுள்ளன. அவற்றைப் போன்ற பெருவாரியான மாறுபாடுகள் ஏதும் இன்றித் தமிழ்நாட்டு மக்கள் ஓரளவு அமைதியாகத் தம் வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள். நெடுங்காலம் அவர்களுடைய சால்புகளும், சமூக இயல்புகளும் தனித்து நின்று வளர்ந்துவந்தன. அதற்குப் பெருந்துணையாக நின்றது தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பேயாகும். பழந்தமிழ் நாட்டின் எல்லைகள் : வடக்கில் தக்காணப் பீடபூமியும், கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் கடல்களும் பழந்தமிழகத்தின் எல்லைகளாக அமைந்திருந்தன. மேலைக் கடற்கரையையொட்டி ஏறக்குறைய 80 கிலோமீட்டர் தொலைவுவரை மேற்குமலைத்தொடர் அமைந்திருக்கின்றது. சில இடங்களில் இது கடலைவிட்டு 150 கிலோமீட்டர் விலகியும், 8 கிலோமீட்டர் அளவுக்கு நெருங்கியும் இருப்பதுண்டு. இம் மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதற்குத் ‘தொட்ட பெட்டா’ (பெரிய மலை) என்று பெயர். அதன் உயரம் 2672 மீட்டர் ஆகும். தெற்கே ஆனைமுடி என்னும் மற்றொரு சிகரம் உள்ளது. மேற்குமலைத் தொடர் மிகப் பெரியதொரு சுவர்போலக் காட்சியளிக்கின்றது. இதில் கணவாய்கள் மிகவும் குறைவு. கோயமுத்தூருக்கு அண்மையிலுள்ள பாலக்காட்டுக் கணவாயும், திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஆரல்வாய் மொழிக் கணவாயும், இம் மாவட்டத்தின் மேற்கில் உள்ள செங்கோட்டைக் கணவாயும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. |