பக்கம் எண் :

தமிழகத்தின் இயற்கை அமைப்புகள் 15

     மேற்கு மலைத்தொடரின் ஆனைமலைகள் சிறப்பானவை; இத் தொடர்
முழுவதிலும் காடுகள் அடர்ந்து செழித்து வளர்ந்துள்ளன. விரிந்து ஆழ்ந்த
பள்ளத்தாக்குகளும், முகில் தவழும் குவடுகளும், துள்ளி விழும் அருவிகளும்
மேற்குமலைத் தொடரை அணி செய்கின்றன. இங்கு வளர்ந்திருக்கும் வளமான
காடுகளில் கட்டடங்கள் கட்டப் பயனாகும் உயர்தரமான தேக்கு மரங்களும்,
நூக்கமரங்களும், கடுக்காய் வேங்கை மரங்களும் செழித்து வளர்கின்றன. இக்
காடுகளில் யானைகள் கூட்டங் கூட்டமாக உயிர் வாழ்கின்றன. வேங்கை, புலி,
சிறுத்தை, கரடி, காட்டெருமை முதலிய வன விலங்குகளும், மான், கடம்பை
முதலியவையும், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி போன்ற சிறு விலங்குகளும்
ஏராளமாகக் காணப்படுகின்றன.

     மேற்குமலைத் தொடரைப் போலக் கிழக்குமலைத் தொடர் அவ்வளவு
உயரமும், வனப்பும், வன வளமும் உடையதன்று. அது தொடர்ந்தும்
இடைவெளியின்றியும் அமையவில்லை. பல இடங்களில் அது சிதறுண்டு
காணப்படுகின்றது. மேற்கு மலைத் தொடரைவிடக் கிழக்குமலைத்தொடர்
மிகவும் பழைமையானதென்று புவியியலார் கூறுவர். இது ஒரிஸ்ஸா
மாநிலத்தில் தொடங்கித் தெற்கு நோக்கிக் காணப்படுகின்றது. சென்னைக்கு
வடக்கே சுமார் 320 கிலோமீட்டர் நீளத்துக்கு இது சுமார் எண்பது
கிலோமீட்டருக்கு மேல் கடற்கரையை விட்டு விலகிச் செல்லுவதில்லை.
சென்னை நகருக்கு மேற்கில் இத்தொடர் தென்மேற்காக ஒதுங்கி நீண்டு
நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடருடன் இணைகின்றது.

     மேற்குமலைத் தொடருக்கும் கிழக்குமலைத் தொடருக்கும் இடையிட்ட
சமநிலப் பகுதியானது மேற்கு-கிழக்காகச் சரிந்து காணப்படுகின்றது.
இக்காரணம்பற்றி மேற்குமலைத் தொடரில் தோன்றும் ஆறுகள் யாவும்
மேற்கினின்றும் கிழக்காக ஓடி வங்கக் கடலில் கலக்கின்றன. பாலாறு,
செய்யாறு, தென்பெண்ணை, காவிரி, வைகை, தாமிரவருணி ஆகியவை
தமிழ்நாட்டு ஆறுகளில் சிறந்தவையாம். மேற்குமலைத் தொடரில்
உற்பத்தியாகும் சிற்றாறுகள் பல கேரள நாட்டுக்கு வளமூட்டி அரபிக் கடலில்
கலக்கின்றன. பெரியாறும், பாரதப்புழையும் அவற்றுள் சிறந்தவையாம்.

     தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது
காவிரியாகும். கங்கையாற்றைப் போலவே இஃதும் நினைப்பார் நெஞ்சில்
பெருமிதத்தையும் இன்பக் கிளர்ச்சியையும் தூண்டவல்லது. காவிரியானது
கருநாடக மாநிலத்தைச்