பக்கம் எண் :

16தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

சார்ந்த குடகில் உற்பத்தியாகித் தென்கிழக்காக ஓடி வங்கக் கடலில்
கலக்கின்றது. வரலாற்றுப் புகழ்வாய்ந்த பல பட்டணங்கள்
இவ்வாற்றங்கரைகளின்மேல் அமைந்துள்ளன. கருநாடக மாநிலத்தில்
சிவசமுத்திரம் அருவிக்கு அண்மையில் அமைந்துள்ள தலையரங்கமும்,
மைசூர் நகரத்துக்கு 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீரங்கப்
பட்டணமும், தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற திருவரங்கமும்
காவிரியாற்றின் இடையில் உள்ள மூன்று அரங்கங்கள். இவை யாவும்
வைணவத் திருப்பதிகள். திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 15 கிலோமீட்டர்
தொலைவில் காவிரியாறானது இரு கிளைகளாகப் பிரிகின்றது. தென்
கிளைக்குக் காவிரி என்றும், வட கிளைக்குக் கொள்ளிடம் என்றும் பெயர்.
இவ்விரு கிளைகளும் சிறிது தொலைவு ஓடி மீண்டும் ஒன்றுகூடுகின்றன.
இவற்றின் இடையிட்ட தீவில் திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்று
வழங்கப்படும் பகுதியில் வைணவக் கோயிலும், திருவானைக்கா என்று
வழங்கப்படும் பகுதியில் சிவன் கோயிலும் அமைந்துள்ளன. காவிரியாறானது
கடலில் கலக்குமிடத்தில் பண்டைய காலத்தில் புகழ்பெற்ற நகரமான
காவிரிப்பூம்பட்டினம் செழிப்புற்று விளங்கிற்று. இந் நகரத்துக்குப் புகார்
என்றும், பூம்புகார் என்றும் பெயர்கள் உண்டு. காவிரியின் புகழாக
அமைந்துள்ள பாடல்கள் சங்க இலக்கியத்தில் பல உள்ளன.

     சேர்வராயன் மலைகள், கல்ராயன் மலைகள், பச்சை மலை
ஆகியவற்றின் சரிவுகளில் துள்ளியோடும் அருவிகள் ஒன்று கூடி
வெள்ளாறாகின்றது. இந்த ஆறு கிழக்கு நோக்கி ஓடிச் சிதம்பரத்துக்கு 16
கிலோமீட்டர் வடக்கே பறங்கிப்பேட்டையில் கடலில் கலக்கின்றது.
வெள்ளாற்றைப் பலகாலம் சோழநாட்டின் எல்லையாகக் கொண்டிருந்தனர்.
தொண்டை நாட்டில் ஓடும் பாலாறானது கருநாடக மாநிலத்தில் நந்திதுர்க்கம்
என்னும் மலைப்பகுதியில் தோன்றுகின்றது. அது கிழக்காக ஓடி வட
ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களைக் கடந்து சென்று சதுரங்கப்
பட்டினத்தினருகில் கடலுடன் கலக்கின்றது. பெருமழை பெய்தாலன்றி
இவ்வாற்றில் வெள்ளம் பெருகுவதில்லை. அக்காரணத்தால் பாலாற்று
வெள்ளத்தால் நிரம்ப வேண்டிய ஏரிகள் யாவும் பெரும்பாலும் வறண்டே
காணப்படும். ஆற்று மணலில் கால்கள் கோலியும், ஆற்றுப் படுகைகளில்
கிணறுகள் தோண்டியும் உழவர்கள் பாசன நீர் இறைத்துக் கொள்ளுவார்கள்.

     தென்பெண்ணையாறானது கருநாடக மாநிலத்தில் சென்னராயன்
பேட்டை என்னும் இடத்தில் உற்பத்தியாகின்றது.