பிறகு அது தமிழ்நாட்டில் இறங்கிச் சேலம், தென்னார்க்காடு மாவட்டங்களில் ஓடிக் கடலூருக்கு அண்மையில் கடலுடன் கலக்கின்றது. வைகையாறு பழநி மலையில் தோன்றுகின்றது; அது மதுரை மாநகருக்குச் சீரையும் சிறப்பையும் வழங்குகின்றது ; மதுரையைக் கடந்து, கிழக்கு நோக்கிப் பாய்ந்து சென்று வங்கக் கடலோடு கலக்கின்றது. இவ் வாற்றிலும் ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடுவதில்லை. மேற்குமலைத் தொடரில் பொழியும் மழை நீரை அணைகள் கட்டித் திருப்பி வைகையில் செலுத்துகின்றனர். வைகையாறும் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் புகழையும் பாராட்டையும் பெற்றுள்ளது. தாமிரவருணியாறு திருநெல்வேலி மாவட்டத்துக்கு நீர் வளத்தை வழங்குகின்றது. தென்மேற்குப் பருவக் காற்றினால் மேற்குமலைத் தொடரின் தென்கோடியில் அடைமழை பெய்யும். அம் மழைநீர் முழுவதும் தாமிரவருணியில் திரண்டோடி வங்கக் கடலில் கலக்கின்றது. எகிப்து மக்களுக்கு நைல் நதி எவ்வாறு உயிர்நாடியாக விளங்குகின்றதோ அவ்வாறே தென்பாண்டி நாட்டுக்குத் தாமிரவருணி உதவுகின்றது என்பர். கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கோடியில் பல சிற்றாறுகள் ஓடுகின்றன. அவற்றுள் புகழ்பெற்றது பழையாறு என்பது. பல சிற்றாறுகள் ஒன்றுகூடிப் பழையாறு உருவாகின்றது. அச் சிற்றாறுகளில் ஒன்று மகேந்திரகிரியின் தென்புறம் தோன்றிக் கானாறுகள் பலவற்றுடன் கூடிப் பூதப்பாண்டி, கோட்டாறு, நாகர்கோயில், சுசீந்திரம் ஆகிய ஊர்களை அணைத்துச் சென்று மணக்குடி என்னும் இடத்தில் கடலில் கலக்கின்றது. இவ்வாறு உற்பத்தியாகுமிடத்தில் இதன்மேல் பண்டைய காலத்தில் கட்டப்பெற்ற அணை ஒன்று உள்ளது. இவ்வணைக்குப் ‘பாண்டியன் அணை’ என்று பெயர் வழங்குகின்றது. இவ்வாற்றை மக்கள் ‘பறளியாறு’ என்றும் பெயரிட்டழைக்கின்றனர். சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் ‘பஃறுளி’யாறும் இப் பறளியாறும் ஓராற்றினையே குறிக்கின்றனவா என்பதைப்பற்றி ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழகத்து மக்கள் தொன்றுதொட்டு மழையையே நம்பி வாழ்ந்து வந்துள்ளனர்; உழவுத்தொழிலைப் போற்றி வளர்த்து வந்துள்ளனர். அவர்கள் செய்து வந்த ஏனைய தொழில்கள் யாவும் உழவுக்குத் துணைபுரிவனவாகவே அமைந்திருந்தன. மழைத்துளியின்றிப் பசும்புல்லும் தலைகாட்டாது என்பார் திருவள்ளுவர். உயர்ந்த மலைகளும் அடர்ந்த காடுகளும் |