நிறைந்த பழந்தமிழ்நாட்டில் வானம் பொய்க்காமல் காலமழை பொழிந்து வந்தது. குறித்த காலத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஏரிகளையும் குளங்களையும் நிரப்பின. அதனால் உழவுத் தொழில் செழித்து உணவுப் பண்டங்கள் குறைவின்றிக் கிடைத்து வந்தன. ஆயினும் சில காலங்களில் பருவமழை பெய்யாது மக்கள் பெரும் துயரத்திற்குள்ளானதுமுண்டு. தமிழகத்துக்கு மழையை வழங்குவன இரு பருவக் காற்றுகள். ஒன்று தென்மேற்குப் பருவக்காற்று ; மற்றொன்று வடகிழக்குப் பருவக்காற்று. ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் தென்மேற்குப் பருவக்காற்று வீசுகின்றது. இது இந்துமாக்கடலையும், அரபிக் கடலையும் கடந்து வந்து மேற்கு மலைத்தொடரின் மேற்புரத்தைத் தாக்குகின்றது. அதனால் அங்கெல்லாம் பெருமழை பெய்கின்றது. அதனால் கேரள நாட்டுக்குக் குறைவின்றி நீர்வளம் சுரக்கின்றது. கேரளத்தில் ஓராண்டில் சராசரி 200 சென்டிமீட்டர் மழை பெய்கின்றது. தென்மேற்குப் பருவக் காற்றானது உயரமான மேற்கு மலைத் தொடரைக் கடந்து வீசுவதில்லை. இதனால் தமிழ்நாட்டுக்குப் போதிய நீர்வளம் கிடைப்பதில்லை. எனினும், இக் காற்றுப் பாலக்காட்டுக் கணவாயின் வழியே நுழைந்து வந்து சவ்வாது மலைகளின்மேலும், சேர்வராயன்மலைகளின் மேலும் மோதி அவ்வப் பகுதிகளில் சிறிதளவு மழை பயக்கின்றது. இவையே யன்றி வேறு சில இடங்களும் இக் காற்றினால் மழைவளம் பெறுவதுண்டு. பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, பொள்ளாச்சி, கோயமுத்தூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகியவை அத்தகைய இடங்களுள் சில. ஆகஸ்டு மாதத்தின் இடையில் காவிரியாற்றோரப் பகுதிகளிலும், காவிரியின் கழிமுகத்திலும், தென்மேற்குப் பருவக்காற்றினால் நல்ல மழை பெய்வதுண்டு. ஆகஸ்டின் பிற்பகுதியிலும், செப்டம்பர் முழுவதிலும் காஞ்சிபுரத்துக்கும் திருப்பத்தூர் (இராமநாதபுரம்) நகரத்துக்கும் இடையிட்ட கடலோர மாவட்டங்களிலும், மரக்காணம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களிலும் இப் பருவக் காற்று மழையைக் கொடுப்பதுண்டு. நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி ஆகிய உள்நாட்டு ஊர்களில் அக்டோபர் மாதத்தில்தான் மழையை எதிர்பார்க்கலாம். அச் சமயம் தென்மேற்குப் பருவக்காற்று ஓய்வுற்று வடகிழக்குப் பருவகாற்றானது தொடங்குகின்றது. இக்காற்று அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரையில் வீசும். தென்மேற்குப் பருவக்காற்றைப்போல இக் காற்றினால் அடைமழை பெய்வதில்லை. எனவே, மேற்குமலைத் தொடரின் கீழ்ப்புறம், |