பக்கம் எண் :

தமிழகத்தின் இயற்கை அமைப்புகள் 19

சமவெளிப் பகுதிகளில் கிடைக்கக் கூடிய மழைவளம் மிகவும் குறைவுதான் ;
ஓராண்டில் சராசரி 100, 125 சென்டிமீட்டருக்கு மேல் இராது. பொதுவாகத்
தமிழ்நாட்டில் ஐப்பசி (அக்டோபர்-நவம்பர்) மாதம் முழுவதிலும் நல்ல மழை
பெய்வதுண்டு. வடகிழக்குப் பருவக் காற்று கார்த்திகை மாதத்தில் மெலிவுற்றுச்
சிறிதளவு மழையையே கொடுக்கின்றது. பிறகு அறவே ஓய்ந்து விடுகின்றது.

     வடகிழக்குப் பருவக்காற்றும் சிற்சில ஆண்டுகளில் ஒழுங்காக
வீசுவதில்லை. வானம் பொய்க்கும்போது நாட்டில் வறட்சி ஏற்படும். வறட்சி
காலங்களில் மக்கள் கிணறு, கயம், ஊற்றுக் கால்கள் ஆகிய நீர்நிலைகளை
நாடுவார்கள். சில சமயம் வடகிழக்குப் பருவக்காற்றினால் அளவுக்கு மீறிய
மழையும் பெய்வதுண்டு ; புயலும் வீசும். வங்கக் கடலில் அவ்வப்போது காற்று
மண்டலங்களில் அழுத்தம் ஏற்படுவதுண்டு. அப்போதெல்லாம் புயற்காற்று
ஒன்று உருவாகி, நாட்டுக்குள் நுழைந்து கடற்கரை வட்டங்களில்
பெருமழையைக் கொடுக்கும், புயலாலும் வெள்ளத்தாலும் உயிருக்கும்
உடைமைக்கும் சேதம் விளையும் ; உழவுத் தொழிலுக்கும் ஊறு நேரும். இக்
காரணத்தால் பெருமழையை அடுத்தும் நாட்டில் பஞ்சம் நேரிடுவதுண்டு.
பொதுவாகத் தென்னிந்தியாவில் கோடையிலோ, கார்காலத்திலோ மிதமிஞ்சிய
தட்பவெட்ப வேறுபாடு ஏற்படுவதில்லை.

     மக்களின் வாழ்க்கைக் கூறுகளை மாற்றியமைக்கக்கூடிய இயல்பு
பெருமழைக்கும், வறட்சிக்கும், குளிருக்கும், வெயிலுக்கும் உண்டு.

     இக் காலத்தில் விஞ்ஞானத்தின் துணைகொண்டு இயற்கையால்
விளையும் இன்னல்களும், இடர்ப்பாடுகளும் வாழ்க்கைக்கு ஊறு விளைக்காமல்
ஓரளவு பாதுகாத்துக் கொள்ளக்கூடும். ஆற்றின்மேல் அணையிட்டு
ஏரிகளையும் குளங்களையும் நிரப்பிக் கொள்ளுகின்றோம் ; பெரிய பெரிய
நீர்த்தேக்கங்களையும் அமைத்துக் கொள்ளுகின்றோம் ; வறட்சி ஏற்படும்
போது கிணறுகள் தோண்டி மின்இயந்திரங்களைக் கொண்டு நீர் இறைத்துக்
கொள்ளுகின்றோம். ஆனால், பழங்காலத்தில் இயற்கையாற்றலின்
வெறியாட்டங்களுக்கு அஞ்சிச் செயலற்று நின்றனர். ‘வருவது வழியில்
நில்லாது’ என்று எண்ணி நன்மையையும் தீமையையும் வந்தது வந்தவாறே
ஏற்றுக்கொண்டனர். காற்றும், மழையும், தட்ப வெப்பங்களும் மக்கள்
வாழ்க்கை இயல்புகளை மாற்றக் கூடியவை என்பது விஞ்ஞானங் கண்ட
உண்மை. அவ்வாறே மக்களின் இயல்பு அவர்கள் வாழும் இடங்கட்கு