தமிழருக்கும் பாபிலோனியா, சுமேரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு மிடையே முற்காலத்திலேயே விரிவான கடல் வாணிகம் நடைபெற்று வந்த செய்தியை முன்னரே அறிந்தோம். அந் நாடுகள் அனைத்தும் விண்மீன்கள், கோள்கள் ஆகியவற்றைப்பற்றி நன்கு அறிந்திருந்தன. அவர்களுடன் வாணிகத் தொடர்பு கொண்டவர்களும், பண்டைய நாளிலேயே விண்மீன் களின் துணைகொண்டு திசையறிந்து ஆழ்கடலோடியவர்களுமான தமிழ் மக்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்றான் வானவியல் அறிவை வளர்த்துக்கொண்டார்கள் என்னும் கூற்று அடிப்படையிலேயே பிழைபட்டதெனக் கொள்ளவேண்டும். கடலோடும் மக்கள் யாருமே வடமீன், கோள்களுள் ஒளிமிக்கவையான வெள்ளி, வியாழன், செவ்வாய் ஆகியவற்றின் வான நிலையைக் கண்டு காலத்தையும் திசையையும் கணிக்காமல் மரக்கலம் ஓட்ட முடியாது. கடல் பயணம் செய்தவனைக் ‘குலக்கேடன்’ என்று ஒதுக்கிவைத்தும், அவனுடைய நாக்கையும் மூக்கையும் சுடரால் சுட்டு அவனுக்குக் கழுவாய் செய்தும், கடல் பயணத்துக்கு இழுக்குக் கற்பித்த ஆரியரிடம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே திரைகடலோடிய தமிழர்கள் வானவியல் பயின்றார்கள் என்னும் கூற்று சாலவும் பழுதுபட்டதாகும். திருக்குறளில் ஏழுநாள் கால அளவாகிய வாரத்தைப்பற்றிய குறிப்பு ஒன்று உண்டு.65 இந் நூல் சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலைக்கும் முற்பட்டது என்பதை யறிவோம். திருஞானசம்பந்தர் (7ஆம் நூற்றாண்டு) ஏழு கிழமைகளின் பெயர்களையும் ஒரு பதிகத்தில் வைத்துப் பாடியுள்ளார்.66 செவ்வண்ணக் கோளைச் ‘செவ்வாய்’ என்றும், பொன்வண்ணமாகக் காட்சி யளிக்கும் வியாழனைப் ‘பொன்’ என்றும், வெண்ணிறக் கோளை ‘வெள்ளி’ என்றும், நீலவண்ணக் கோளான சனியை ‘நீலன்’ என்றும், ‘காரி’ என்றும் பழந்தமிழர் சுட்டிக் காட்டினர். இலக்கிய அகச் சான்றுகளைக் கொண்டே பண்டைய தமிழரின் வானவியல் நுண்ணறிவைக் கண்டு வியப்புறலாகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பிற்காலத்தியவை என்று கருதும் ஆய்வாளர்கள் காட்டும் சான்று மற்றொன்றும் உண்டு. மணிமேகலையின் ‘தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை’யில் மணிமேகலை கேட்டறிந்த பௌத்த அறம் திந்நாகர் என்ற பௌத்த அடிகளின் அறிவுரைகளேயாம் என்றும், ஆதலால் இக் 65. குறள் 1278. 66. தேவாரம். 2.85 : 1 |