சோதிட நூலின்படி அமைந்துள்ள காலக் கூறுபாடுகளான திங்கள், பக்கம், நாள் ஆகியவற்றைத் தமிழர் பழங்காலத்திலேயே அறிந்திருந்தனர். அதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. சில நூற்றாண்டுகட்கு முன்புதான் பயின்றனர் என்று சில ஆய்வாளர் மேற்கொள்ளும் கருத்துக்கு ஆழமின்று. இடபம் முதலான பன்னிரண்டு இராசிகளையும் கோள்கள் திரிந்துவரும் வானமண்டிலத்துக்குள் அமைந்திருக்கும் நாண்மீன்களையும் கோள்நிலை திரிவதாலும், புகைமீன் வீழ்வதாலும், நாண்மீன் ஒவ்வொன்றுடனும் நிலாக்கூடி வருவதாலும் ஏற்படக்கூடிய விளைவுகளையும் தமிழர் அறியாதவர்களல்லர். ஞாயிறானது மேட இராசி தொடங்கி, இராசிதோறும் பெயர்ந்து செல்லுவதை நெடுநல்வாடை ஆசிரியர் நக்கீரர் அறிந்திருந்தார்.61 கூடலூர்கிழார் இராசியின் பெயர், அதில் ஞாயிறு நின்ற நிலை, வெள்ளி எனும் கோள் நின்ற நிலை, நாண்மீன்கள் எழுவதும், அமர்வதும், எரிமீன் விழுவதும் ஆகியவற்றைத் தம் பாடல் ஒன்றில் விளக்குகின்றார்.62 இராசிகளுக்கும் நாண்மீன்கட்கும் அவர் தமிழ்ப் பெயர்களையே அளித்துள்ளார். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவரின் செய்யுள் ஒன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.63 வானத்தில் ஞாயிறு இராசிதோறும் பெயர்ந்து செல்லுவதையும், அங்கு ஒரு குறிப்பிட்ட வட்டமான வழியிலேயே அது சுற்றி வருவதையும், காற்று இயங்குவதையும், ஆகாயம் நிலைத்து நிற்பதையும், சில கணிகள் தாம் நேரில் சென்று அளந்தறிந்தனர் போல இருக்குமிடமிருந்தே கோள்களைக் கணித்து அறியக்கூடிய ஆற்றல் பெற்றிருந்ததையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர். வானத்தில் மின்னுவன ‘மீன்கள்’, ஞாயிற்றின் ஒளியைக் கொண்டு மின்னுவது ‘கோள்’. கோள்களின் இயக்கங்களைக் கணித்துப் பின்வருவனவற்றை முன்னரே கூறும் ஆற்றல் வாய்ந்தவருக்குக் ‘கணி’ அல்லது ‘கணியன்’ என்று பெயர். கணிகளின் தலைவன் ‘பெருங்கணி’ எனப்பட்டான். சங்க இலக்கியத்தில் கணியைப் பற்றிய குறிப்புகள் பலவற்றைக் காணலாம். கணியன் பூங்குன்றனார் என்பவரும் ஒரு கணியேயாவார். இவர் ‘யாதும் ஊரே, யாவருங் கேளிர்’64 என்று பாடி மக்கள்பால் இருக்க வேண்டிய மிகச் சிறந்ததொரு பண்பாட்டை உலகிற்கு எடுத்துக்காட்டியவர். இவர் சோதிடக் கலையில் வல்லுநராக இருந்தார். 61. நெடுநல். 160, 161 62. புறம். 229 63. புறம். 20. 64. புறம், 192. |