அக்டோபர் 13ஆம் நாள் இவ்வுலக வாழ்வைத் துறந்தான். அவனை யடுத்து அவன் மகன் ஓம்தாத் உல் ஒமாரா ஆர்க்காட்டு நவாபானான். அவனும் 1801-ல் காலமானான். அவனுடன் கம்பெனி அரசாங்கம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி ஆர்க்காட்டு நவாபு தன் நாட்டையும் அரசையும் ஆங்கிலேயருக்கு வழங்கினான். அவனுடைய இழப்புக்கு ஈடாகச் சென்னை அரசாங்கமே அவனுடைய கடன்களைத் தீர்த்துவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதற்காக ஆண்டுதோறும் பன்னிரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கி வைக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரே தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் மேற்கொண்டு விட்டனர். பாளையக்காரரின் கிளர்ச்சிகள் வீரபாண்டியக் கட்டபொம்மன் மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்த பிறகு அவர்களுக்கு வரி தண்டிக் கொடுத்தும் படைவீரர்களைத் திரட்டிக் கொடுத்து உதவி வந்த பாளையக்காரர்கள் தனிக்காட்டு மன்னராக மாறிவிட்டார்கள். ஆர்க்காட்டு நவாபு பெயரளவில் கருநாடகத்தின் மன்னனாக இருந்தானே ஒழிய நாட்டு அரசியல் ஆங்கிலேயரின் கைகளில் அடங்கியிருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியினர் அவனுடன் செய்துகொண்ட ஓர் உடன்படிக்கையின்கீழ்த் திருநெல்வேலிச் சீமையில் வரி தண்டும் உரிமையைத் தம் வசம் மாற்றிக் கொண்டனர் (1781). நான்காண்டுகள் கழித்து நவாபு அவ்வுரிமையை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டான் (1785). ஆனால், ஆங்கிலேயர் மீண்டும் அவ்வுரிமையைப் பெற்றுக் கொண்டனர் (1790). பாஞ்சாலங்குறிச்சி என்ற பாளையத்துக்குக் கட்டபொம்மன் என்பவன் பாளையக்காரன் ஆனான் (1791). வரி தண்டுவதில் கட்டபொம்மனுக்கும் கம்பெனிக்கும் கருத்து வேறுபாடுகளும் பூசல்களும் நேர்ந்தன. கட்டபொம்மன் கம்பெனிக்கு 1797ஆம் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கொடுக்க மறுத்தான். அதுமட்டுமன்றி இராமநாதபுரத்தில் கம்பெனியுடன் முரண்பாடு கொண்டிருந்தவர்கள் அனைவரையும் திரட்டித் தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டான். படைகளுக்கு உணவுப் பண்டங்கள் வழங்கும் பாளையக்காரரின் கடமையொன்றினின்றும் அவன் வழுவினான். மேலும், கம்பெனிக்குத் திறை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின்மேல் அடிக்கடி பாய்ந்து மக்களைச் சூறையாடினான் கம்பெனியின் பேரால் அவன் தன் குடிமக்களிடமே அதிக |