பக்கம் எண் :

ஐரோப்பியரின் வரவு 473

நெருக்கடி கம்பெனி அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. கம்பெனி கவர்னர் சர்
தாமஸ் ரம்போல் (Sir Thomas Rumbold, 1778-80) காலத்தோடொட்டி
ஒழுகத் தெரியாதவன்; ஆட்சித் திறனற்றவன்; காலங்கருதும் வினைத்திட்பமும்,
காலத்தை நெகிழ விடாத தெளிவும் வாய்க்கப் பெறாதவன். அவன்மேல் பல
குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஆகவே, வாரன்ஹேஸ்டிங்ஸ் என்ற
கவர்னர்-ஜெனரல் அவனைக் கவர்னர் பதவியினின்றும் இறக்கிவிட்டான்.
அவனையடுத்து வந்தவன் வைட்ஹில் (White Hill) என்பவன். பல
குற்றச்சாட்டுகளினால் அவனும் ஒதுக்கப் பட்டான். பிறகு, வந்தவன் சார்லஸ்
ஸ்மித் (Charles Smith). இவர்கள் எல்லோரும் குறுகிய காலக் கவர்னர்களாக
இருந்தனர். பின்னர், மக்கார்ட்னே பிரபு (Lord Macartney, 1781-85)
கவர்னராகப் பதவியேற்றான். வந்தவாசியிலும் புதுச்சேரியிலும் ஐதரலியைத்
தோல்வியுறச் செய்து பிரிட்டிஷ் அரசைத் தேடிவந்த அழிவுக் காலத்தைத்
தடுத்து நிறுத்திய சர் அயர் கூட் (Sir Eyre Coote) என்ற படைத் தலைவன்
இந்தக் கவர்னரின் காலத்தில்தான் சென்னையில் களைப்பினாலே கண்ணை
மூடினான். மக்கார்ட்னே பிரபு நவாபுடன் ஓர் உடன்படிக்கை செய்து
கொண்டான் (1781, டிசம்பர் 2). அவ்வுடன்படிக்கையின்கீழ் நாட்டு அரசு
கிழக்கிந்தியக் கம்பெனியின் கைகளுக்கு மாறிற்று. கருநாடக வருமானத்தில்
ஆறில் ஒரு பங்கை நவாபு தன் சீவனாம்சமாகப் பெற்றான். அவனுக்குக்
கடன் கொடுத்திருந்தவர்கள் அனைவரும் தத்தம் கடனைத் திருப்பித்
தரும்படி அவனை ஒருங்கே நெருக்கலானார்கள். ஆகவே, கம்பெனியின்
வருமானம் முழுவதும் நவாபு வாலாஜாவினிடமே ஒப்படைக்கப்பட்டது.
நவாபுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவன் அந்த முழு
வருமானத்தையுங் கொண்டு பழைய கடன்களை அடைக்காமல் மேலும்
மேலும் கடன்களில் மூழ்கினான். கம்பெனிக்கும், தன் கடன்காரருக்கும்
நாட்டின் பல பகுதிகளை அடகு வைத்துக்கொண்டே போனான். அவன்
எழுதிக் கொடுத்த கடன் பத்திரங்கள் பணச் சந்தையில் விற்கப்பட்டன.
நவாபுக்குரிய வருமானத்தின் ஏற்ற இறக்கத்தையொட்டி இப் பத்திரங்களின்
மதிப்பும் எறியும் இறங்கியும் வந்தது.

     கருநாடக நவாபு வாலாஜாவின் வாழ்க்கைப் புயல்களுக்கும் கம்பெனியின்
தொல்லைகட்கும் இறுதியாக ஓர் முடிவு ஏற்பட்டது. நவாப் வாலாஜா
(உம்மீர்உல்ஹிண்ட்-ஓம்தாத் உல்முல்க் அன்சுப் உத்தௌலா - அன்வாருதீன்
கான்பகதூர் - சூபர்ஜங் - சேபா-சாலார்-கருநாடகத்தின் நவாபு முகமதலி)
1795