நவாபுக்கு மட்டுமன்றி ஆங்கிலேயருக்கும் ஆட்பட்டவர்களாக இருந்தனர். நவாபு வாலாஜா தன் அரசாங்கப் பொறுப்புகள் அத்தனையையும் ஆங்கிலேயரின் கைகளில் ஒப்படைத்து விட்டு இன்பக் கோலாகலங்களில் காலங்கழித்து வந்தான். சென்னைப்பட்டினத்தில் சேப்பாக்கத்தில் நவாபுக்கு அழகான அரண்மனை ஒன்று எழுப்பப்பட்டது (1768). அவ்வரண்மனை அமைக்கப்பட்டிருந்த அடிமனையின் பரப்பு 117 ஏக்கராக்கள். அதைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த மதிற்சுவர்கள் வடக்கில் கூவம் ஆற்றிலிருந்து தெற்கில் பாரதி சாலை வரையில் எட்டி நின்றன; மேற்கில் பெல்ஸ் சாலை வரையில் வந்தன. அந்த அரண்மனையின் முகப்பு வாயில், வாலாஜா சாலையில் நின்றது. அவ் வாயில் மூவளைவு கொண்டது. அரண்மனை இரு பகுதிகளாக அமைக்கப்பட்டிருந்தது. தென்பகுதிக்குக் கலசமகால் என்று பெயர். அதன்மேல் சிறுசிறு கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வடபகுதியில் உள்ள கட்டடத்திற்கு உமாயூன் மகால் என்று பெயர். அதில் திவான்கானா அல்லது தர்பார் மண்டபமும் இருந்தது. இவ்விரண்டு கட்டடங்களினிடையே நிற்கும் சதுரமான மாடக் கோபுரம் பிற்காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இவ்வரண்மனையில் இப்போது பல அரசாங்க அலுவலகங்கள் நடைபெற்று வருகின்றன. வடபகுதிக்கும் கடற்கரைச் சாலைக்கும் இடையில் எழிலகம் அண்மையில் கட்டப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடங்கள் நிற்கும் இடத்தில் கூவத்தின் கரையின்மேல் நவாபும், அவன் குடும்பத்தினரும் நீராடும் துறை அமைக்கப்பட்டிருந்தது. இப்போது மாநிலக் கல்லூரியின் முதல்வர் தங்கியுள்ள விடுதியில் அப்போது நீதிமன்றம் ஒன்று செயல்பட்டு வந்தது. கருநாடக வருமானத்திலிருந்து தனக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு நவாபு வாலாஜா வாழ்க்கைப் போகங்களை விலைகொடுத்து வாங்கி அனுபவித்து வந்தான். பரந்து விம்மிய வங்கக்கடல்போல விரிந்து கிடந்த இன்பங்களையெல்லாம் துய்க்க அவனுக்குக் கிடைத்த வருமானம் போதவில்லை. கம்பெனி அலுவலரிடமும் ஏனையோரிடமும் ஆர்க்காட்டு நவாபு அளவிறந்த கடன் வாங்கினான். அவற்றுக்கு முறையற்ற வட்டிகளைக் கொட்டிக் கொடுத்தான். தான் பட்ட கடன்களுக்கு ஆர்க்காட்டுத் தேசத்தை ஈடு காட்டி வந்தான். அவனுக்குக் கடன்களை வாரிக் கொடுத்திருந்த ஆங்கிலேயரின் பேராசை கரைகடந்து போயிற்று. நவாபு கடன் வாங்கியதும் நின்ற பாடில்லை. அவக்கேடான இந் நிலைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டிய |