பக்கம் எண் :

ஐரோப்பியரின் வரவு 471

சுல்தான் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டான். பிரெஞ்சுக்காரரின் படைத்
துணையை நாடினான். அவனுக்கு உதவியாகும் பொருட்டுப் பிரெஞ்சுப்
படைகள் மங்களூர் வந்து இறங்கின (1798). அப்போது வெல்லெஸ்லி பிரபு
கவர்னர் ஜெனரலாக இருந்தான். ஆங்கிலேயரைச் சூழ்ந்து வந்துகொண்ட
பேராபத்தை அவன் நன்கு உணர்ந்தான். உடனே திப்பு சுல்தானுக்கு எதிராக
அவன் நைஜாமுடனும் மராத்தியருடனும் உடன்படிக்கை ஒன்று
செய்துகொண்டான். வெல்லெஸ்லி பிரபு, ஜெனரல் ஹாரிஸ் என்பவனின்
தலைமையில் பெரும் படை ஒன்றைத் திப்புவின்மேல் ஏவினான். ஹாரிஸின்
கடுந்தாக்குதலுக்கு முன்பு திப்புவின் சேனைகள் பேரழிவுக்குட்பட்டு,
வலியிழந்து சீரங்கப்பட்டணத்து அரணுக்குள் பின்னடைந்து போரிட்டன.
ஆங்கிலேயரின் பெரும் பீரங்கிக் குண்டுகள் வெடித்து அரண்
கொத்தளங்களைச் சிதைத்து மதிற்சுவரில் பெரும்பிளவு ஏற்படுத்தின.
அவ்விடைவெளியின்மூலம் ஆங்கிலேயத் துருப்புகள் அணையுடைந்த
வெள்ளம்போல் பாய்ந்து அரணுக்குள் நுழைந்தன. திப்புவின் சேனைகள் 1799
மே, நான்காம் தேதி ஆங்கிலேயரிடம் சரண் அடைந்தன. திப்பு சுல்தான்
தன் இறுதி மூச்சு வரையில் போராடிக் கையில் ஏந்திய வாளுடன் வீர
மரணத்தைத் தழுவினான் (1799). ஆங்கிலேயரின் மாறாத பகைவன்
மாண்டான்; அஃதுடன் அவர்களுக்குத் தென்னிந்தியாவில் அணையிட்டிருந்த
இறுதிப்பகையும் மறைந்தது. திப்பு சுல்தான் பல கலைகளில் கைதேர்ந்தவன்.
பாரசீக மொழியில் ஆழ்ந்த புலமை வாய்ந்தவன். அவன் அரசியல் வாழ்வில்
ஓய்வென்பதையே கண்டவனல்லன். இடையறாமல் உழைத்துக்கொண்டே
இருந்தான். அவன் புதிய பஞ்சாங்கம் ஒன்றையும், நாணயங்களையும்,
அளவைகளையும் புழக்கத்துக்குக் கொண்டுவந்தான்.

     ஆங்கிலேயர் சீரங்கப்பட்டணத்தைச் சூறையாடினர்.
அரண்மனைகளையும் கட்டடங்களையும் இடித்து நிரவினர். மைசூர் தேசம்
ஆங்கிலேயரின் உடைமையாயிற்று, திப்புவின் மக்கள் வேலூர்க் கோட்டையில்
சிறைவைக்கப்பட்டனர்.

     ஆர்க்காட்டு நவாபு, வாலாஜா சாயபு என்ற மாற்றுப் பெயரினனான
முகமதலி, பெயரளவில்தான் கருநாடகத்தின் நவாபாக விளங்கினான். ஆனால்,
அவனுடைய அரசு முத்திரை ஆங்கிலேயரின் கையில் இருந்தது. நவாப்
முகமதலியின் பேரால் கிழக்கிந்தியக் கம்பெனிதான் அரசாங்கத்தை நடத்தி
வந்தது. கருநாடகத்தின் குடிமக்கள் ஆர்க்காட்டு