பக்கம் எண் :

470தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

செலுத்திவந்து வேலூர், ஆம்பூர் வழியாக நுழைந்து சென்று, பெங்களூரைக்
கைப்பற்றிக்கொண்டு சீரங்கப்பட்டணத்துக்கு ஒன்பது கல் தொலைவில் தன்
பட்டாளங்களை நிறுத்தினான். போர் நடவடிக்கைகள் 1791ஆம் ஆண்டு
கோடைக்காலம் வரையில் தேங்கி நின்றன. அவ்வாண்டு நவம்பர் மாதம்
திப்பு கோயமுத்தூரைத் தாக்கிக் கைப்பற்றினான். கார்ன்வாலிஸ் பிரபு சீரங்கப்
பட்டணத்தையும், அதன் கோட்டை கொத்தளங்களையும் தாக்கி யழித்தான்.
சூழ்நிலையானது தனக்கு முரணாக இருந்ததை உணர்ந்த திப்பு சுல்தான்
கார்ன்வாலிஸ் பிரபுவுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றைச் செய்து
கொண்டான் (மார்ச் 1792). இவ் வுடன்படிக்கையின்கீழ் மைசூர் தேசத்தில்
பாதியை நைஜாமுக்கும், மராத்தியருக்கும், ஆங்கிலேயருக்கும் பங்கிட்டுக்
கொடுத்துவிட்டான். மலையாள தேசம், குடகு தேசத்து மன்னன்மேல் ஆட்சி,
திண்டுக்கல் தேசம், பாராமகால் பகுதி ஆகியவை ஆங்கிலேயருக்குக்
கிடைத்தன. போதாக் குறைக்குத் திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு முப்பது
இலட்சம் பவுன்களுக்குமேல் தண்டங்கொடுத்தான்; தன் இரு பிள்ளைகளையும்
அவர்களுக்குப் பிணையாக அளித்தான். ஆனால், இவ்வுடன்படிக்கையானது
தனக்கு மானக் கேட்டை விளைத்தது என்று அவன் அறிந்திருந்தான். அவன்
நெஞ்சில் ஒரு முள் உறுத்திக்கொண்டே இருந்தது. மானமிழந்து வாழ அவன்
உள்ளம் ஒருப்படவில்லை. எனவே, ஆங்கிலேயரின்மேல் அவனுக்கு
வெறுப்பும் அடங்காச் சினமும் பொங்கி எழுந்தன. வஞ்சம் வளர்ந்தது. திப்பு
தன் கோட்டை கொத்தளங்களை வலுப்படுத்தினான்; குதிரைப் படையைப்
புதுப்பித்தான்; உழவுத் தொழிலையும் ஊக்கினான். ஐரோப்பாவில் பல
நாடுகளில் அரசியல் குழப்பங்களும் போராட்டங்களும் நிகழ்ந்து
கொண்டிருந்தன. பிரான்சில் குடிமக்கள் மன்னனையும் அவனைச் சார்ந்த
பிரபுக்களையும் எதிர்த்துப் பெரும் புரட்சி ஒன்றில் ஈடுபட்டனர் (1789).
பிரெஞ்சு மன்னன் பதினாறாம் லூயியும், அவன் மனைவி மேரி
அன்டாய்னெட்டும் மக்கள் நீதிமன்றத்தில் குடித் துரோகிகள் என்ற
தீர்ப்புக்குள்ளானவர்களாய் தூக்குமரம் ஏறி, முடியணிந்த தம் தலைகளை
இழந்தனர். நெப்போலியன் போனப்பார்ட் என்ற படைத் தலைவன்
அரசாட்சியைக் கைப்பற்றி நாட்டை அடக்கியாளலானான். அவனே பிரெஞ்சு
நாட்டின் பேரரசனாகவும் முடிசூட்டிக்கொண்டான் (1804). அவன்
ஆங்கிலேயர்மேல் அளவுகடந்த வெறுப்பும் சினமும் கொண்டிருந்தான்.
இந்தியாவில் ஆங்கிலேயரின் செல்வாக்கை இறக்கிப் பிரெஞ்சு ஆதிக்கத்தை
மீண்டும் உயர்த்துவிக்க அவன் நோக்கம் கொண்டிருந்தான். திப்பு