| பட்டிருக்கும்.121 பார்ப்பனச் சிறுவரும் குடுமி வைத்துக் கொள்ளுவர்.122 ஆண்மக்கள் தலையில் பூச்சூடிக் கொள்ளுவது வழக்கம். தலையில் சூடும் பூமாலைக்குக் கண்ணி என்று பெயர்.123 ஆண்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்ளுவதும் உண்டு.124 உறையுள் குறிஞ்சி நிலங்களிலும், முல்லை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் சிறுசிறு குடிசைகளில் குடியிருந்தார்கள். இக் குடிசைகளுக்குக் குரம்பை என்று பெயர்.125 நெய்தல் நிலத்துப் பரதவர்களின் வீடுகள் புல்லாலும் வைக்கோலாலும் வேயப்பட்டன.126 அவற்றின் நுழைவாயில்கள் மிகவும் குறுகலானவை. வரகு, வைக்கோல், செந்நெல் கதிர், கரும்பு, கூவையிலை ஆகியவற்றாலும் குடிசைகள் வேயப்பட்டன.127 மலையடிவாரத்தில் வாழ்ந்த மக்கள் சிலருடைய வீடுகள் மிக அழகாகத் தீட்டிய வண்ண ஓவியம் போலக் காட்சியளித்தன.128 நகரங்களை மிகப் பெரிய மாடி வீடுகள் அணி செய்தன. இவ் வீடுகட்கு வேயா மாடங்கள் என்றும் பெயர் உண்டு.129 இவை சுட்ட செங்கல்லால் எழுப்பப்பட்டவை. இவ் வீடுகளில் மண்டபம், கூடம், தாயக்கட்டு, அடுக்களை என்று தனித்தனிப் பகுதிகள் அமைக்கப் பட்டிருந்தன.130 வீடுகளில் சாளரங்கள் தெற்கு நோக்கி அமைக்கப் பட்டிருக்கும். அரண்மனைகளின் கூரைகட்குப் பொற்றகடு வேய்ந்திருந்தார்கள்.131 இவ் வரண்மனையின் வாயில்கள் மிகவும் உயரமானவை; குறுகியதொரு மலைக்கணவாய்போலக் காட்சியளித்தன. வெற்றிக்கொடிகளை உயர்த்திக் கொண்டு வீரர்கள் யானைகளின்மேல் அமர்ந்து அவ் வாயில்களின் மூலம் எளிதில் நுழைந்து செல்லுவர். அரண்மனைகளில் விடிவிளக்குகள் எரிந்துகொண்டே இருந்தன.132 இவை யாவும் பாவை விளக்குகள்; யவனரால் வார்க்கப்பெற்றவை. கைவல் கம்மியர் சிற்பநூல் முறைப்படியே மனைகளையும் நகரங்களையும் வகுத்துக் கொடுத்தார்கள்.133 121. புறம். 77:4; பு. பொ. வெ. மாலை, 209. 122. ஐங்குறு. 202 123. புறம். 24, 39. 124. அகம். 195 125. நற்றி. 207. 126. குறுந். 235. 127. புறம். 22; பெரும்பாண். 190-1 128. புறம். 251; நற்றி.268, பதிற். 61:3, 88:28; அகம் 98:11 129. சிலப். 5 : 7 130. மணி. 29 : 61 முதலியவற்றாலறியப்படும் 131. சிலப் 14:164-7. ப-உரை 132. அகம். 87: 12-3; நெடுநல். 101-5 133. நெடுநல். 76-9. |