| ஈடிணையற்று விளங்கினான். மதுரைத் தமிழக்கூத்தனார் தமிழரின் கூத்துகளை ஆடிக்காட்டுவதில் புகழ் பெற்றிருந்தார். நாட்டியங்களிலும் கூத்துகளிலும் அரங்கங்களையமைக்கும் இலக்கணத்தைப்பற்றியும், கூத்தாடுவோரின் மெய்ப்பாடுகளைப் பற்றியும் அடியார்க்கு நல்லார் விரிவாகக் கூறுகின்றார். இக் கலைகளைப் பற்றிய நூல்கள் தமிழில் பல இருந்தன. அவையனைத்தும் இப்போது அழிந்துபோய்விட்டன. அரங்கின் முன்பு மூன்று வகைத்தான எழினிகள் தொங்கவிடப்பட்டன. ஒன்று, மேலிருந்து கீழே விழுவது; இரண்டு, ஒரு பக்கமிருந்து மற்றொரு பக்கத்துக்கு இழுக்கப்பட்ட ஒற்றைத் திரை; மூன்று, அரங்கத்தின் இரு புறங்களினின்றும் இழுக்கப் பெறும் இரட்டைத் திரைகள். இவை அரங்கத்தின் நடுவில் ஒன்றுசேரும். கூத்துகளில் பலவகையுண்டு. மன்னருக்கும் மக்களுக்குமானது ஒன்று. புகழ்ந்தும் இகழ்ந்தும் ஆடுவது மற்றொன்று. மூன்றாவது, தமிழக் கூத்தும் ஆரியக் கூத்தும்; நான்காவது, தேசிக் கூத்துகள். பொதுவாகக் கூத்துகளில் பதினொரு வகையுண்டு. அவை முறையே கடையம், மரக்கால், குடை, துடி, அல்லியம், மல், குடம், பேடு, பாவை, கொடுகொட்டி, பாண்டரங்கம் என்பன. தமிழரின் கூத்துகள் நாட்டியம் என்னும் பெயரில் சிறிதளவு அயல் கலப்பேற்று இப்போது நடைபெற்ற வருகின்றன. தமிழக் கூத்தைப்போன்றே தமிழிசையும் தன் நிலை திரிந்து கருநாடக இசை என்னும் பெயரில் இப்போது வழங்கி வருகின்றது. ஏழிசையின் தமிழ்ப் பெயர்களான குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை இப்போது வழக்கொழிந்து போயின. அவற்றின் வடமொழிப் பெயர்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பவை இப்போது வழக்கில் இருந்து வருகின்றன. அக் காலத்தில் யாழும் குழலும் இன்னிசைக் கருவிகளாகப் பயன்பட்டன. யாழ்வகையில் 21 நரம்புகள் கட்டிய பேரியாழும், 19 நரம்புகள் கட்டிய மகர யாழும், 14 நரம்புகள் கட்டிய சகோட யாழும்,7 நரம்புகள் கட்டிய செங்கோட்டு யாழும் 1000 நரம்புகள் கட்டிய ஆதியாழும் இவற்றுள் சிறப்பானவையாம். |