பக்கம் எண் :

158தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

குழலிலும் பலவகை யுண்டு. அவற்றுள் ஆம்பல் குழல் என்பதும் ஒன்று.191
வெண்கலத்தால் ஆம்பற் பூப்போல அணைசு பண்ணி நுனியில்
பொருத்தப்பட்ட கருவி இது.

கல்வி

     சங்ககாலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர்.
கல்வியைப்பற்றிப் பேசும் அதிகாரங்கள் நான்கு திருக்குறளில்
சேர்க்கப்பட்டுள்ளன.192 குற்றமறக் கற்க வேண்டுமென்றும், கற்ற பின்பு தாம்
கற்ற வழியே நடக்கவேண்டும் என்றும், கல்வி கற்கக் கற்க அறிவு சுரந்து
கொண்டே போகும் என்றும், கல்வி கற்ற ஒருவனுக்கு உலகம் முழுவதும் தன்
சொந்த ஊராகவே தோன்றும் என்றும், கல்விச் செல்வம் ஒன்றே அழியாச்
செல்வமாம் என்றும், கல்லாதவன் மேனியழகு ஒரு பொம்மையின் அழகுக்கு
நிகராம் என்றும் கல்வியைவிடக் கேள்வியே மேம்பட்ட தென்றும், யார் யார்
என்ன சொன்னாலும், அதை ஆராய்ந்து அதனுள் காணக்கூடிய உண்மையை
ஓர்வதே நல்லறிவு என்றும் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

     கல்வி பயிலும் உரிமை சங்க காலத்தில் தனிப்பட்ட ஒரு சிலரின்
உரிமையாக இருந்ததில்லை. எக் குலத்தைச் சார்ந்தவர்களும், செல்வர்களும்,
வறியோரும், மன்னரும் எளிய குடிமக்களும் ஆகிய ஆண்களும் பெண்களும்
கல்வியைத் தேடிப் பெற்றனர். இளைஞர்கள் மணமான பிறகும் தங்கள்
மனைவியைப் பிரிந்து சென்றேனும் கல்வி கற்பதுண்டு. இளமையிலேயே
கல்விப் பயிற்சி தொடங்கிற்று என்பதனை ‘இளமையிற் கல்’ என மூதுரை
எடுத்துக்காட்டுகின்றது. அறிஞர் அமர்ந்திருந்த ஓரவையின் முன்னணியில்
அமர்த்தப்பெறும் வாய்ப்பைத் தம் மகனுக்கு ஒவ்வொரு தந்தையும் தேடிக்
கொடுக்க வேண்டு மென்பது தமிழர் கண்ட அறம்.193 ‘ஈன்று புறந்தருதல்
என்தலைக் கடனே, சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்று
பெண்கள் கருதினர்.194 ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால்
ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும், அவன்கண் படுமே.’195 ஆதலினால்
குல வேறுபாடு நோக்காமல் மக்கள் அனைவருமே கல்விப் பயிற்சியில்
ஈடுபட்டிருந்தனர். உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், ஆசிரியரிடம்
அடக்கமாகவும் அன்பாகவும் அமர்ந்து கல்வி கற்க வேண்டுமெனப் பாண்டிய
மன்னன் ஒருவன் கூறுகின்றான்.196 கல்விப் பயிற்சிக்கு வறுமை
நேர்ப்பகையாகும்.197

     191. நற்றி. 113.
     192. குறள், 40-43 அதிகாரங்கள்.
     193. குறள். 67.
     194. புறம். 312.
     195. புறம். 183.
     196. புறம். 183.
     197. புறம்.266 : 13; பெரும்பாண், 22 (நச்சி);
         குறள். 1043; மணி.11 : 76-80