பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 159

     ஒவ்வோர் ஊரிலும் பள்ளிகள் நடைபெற்று வந்தனவா என்பதும்,
பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் பயின்றனர் என்பதும் தெரிந்து
கொள்ளுவதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. ஒவ்வோர் ஊரிலும் கல்வி
பயிற்றும் கணக்காயர் இருந்தனர். ‘கணக்காயர் இல்லாத ஊரும்...நன்மை
பயத்தல் இல’ என்று நூல்கள் கூறுகின்றன.198 கிடங்கில் குலபதி
நக்கண்ணனார் என்றொரு சங்கப் புலவர் இருந்தார். ஆயிரவருக்கு மேற்பட்ட
மாணவர்களை ஒன்று கூட்டி அவர்கட்கு அவர் கல்வி பயிற்றி வந்தார் என
அறிகின்றோம்.199 பதினாயிரம் மாணவர்கட்குக் கற்பித்தவர்கட்குத்தான்
‘குலபதி’என்னும் பட்டம் உரிமையாகும். கல்வி பயிற்றப்பட்ட இடம் ‘பள்ளி’
எனப்பட்டது. பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று
வந்தன. மாணவர்கள் ஓலையின்மேல் எழுத்தாணி கொண்டு எழுதினர்.
கல்வியின் பயன் கடவுளையறிதலே என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது.200
மாணவர்கள் கல்வி பயிலும்போது இரந்துண்ணும் பழக்கம் அக் காலத்தில்
இருந்து வந்ததென அறிகின்றோம்.201 இரந்து உண்டு கல்வி பயிலுவது
உயர்ந்த பண்பாடாகக் கருதப்பட்டது. கல்விப் பயிற்சியுடன் அறிவு
வளர்ச்சியும் இணைந்து சென்றது. பல குலத்தைச் சார்ந்த புலவர்கள்
தமிழகமெங்கணும் உலவி வந்ததையும், மன்னருதவியுடன் மதுரையில்
அவர்கள் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்ததையும் நோக்குங்கால் அப்
புலவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டும், கற்றும், அவற்றின்
பொருளையுணர்ந்தும், அவற்றால் பயன்பட்டும் வாழ்ந்து வந்த பொதுமக்கள்
நாடெங்கும் நிரம்பியிருந்தனர் என்று ஊகிக்கலாம். தமிழ் மன்னருடன்
தமிழ்ப் புலவர்களும் மக்களின் பாராட்டையும் மதிப்பையும் பகிர்ந்து
கொண்டனர்.

     ஆசியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் மக்கள்
கல்வி பயின்றனர். எனினும் கபிலர், பரணர், திருவள்ளுவர், நக்கீரர் போன்ற
பெரும் புலவர் பலர் சங்ககாலத்தில் வாழ்ந்துவந்தனர். ஒருவருடைய
புலமையை அறிஞர்கள் எளிதில் ஒப்புக்கொள்ளுவதில்லை. அவருடைய
பாடல்களோ நூல்களோ தமிழ்ச் சங்கத்தார் முன்பு அரங்கேற்றம் பெற
வேண்டும். சங்கப் புலவர்கள் அப் புலவரைப் புலமை நிரம்பிய சான்றோன்
என ஒருங்கே ஒப்புக்கொள்ளவேண்டும். கூத்தும் இசையும் மன்னரின் முன்பு
அரங்கேற்றிவைக்கப்பெற்றன. பல துறைகளில் புலமை சான்ற பேரறிஞர்கள்
போலி ஆசிரியரை

     198. திரிகடுகம். 10.
     199. குறுந். 252.
     200. குறள். 2
     201 குறுந். 33.