பக்கம் எண் :

160தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

அறைகூவி அழைத்து அவர்களுடன் சொற்போர் புரிந்து அவர்களைத்
தோல்வியுறச் செய்து நல்லறிவு புகட்டுவது அக்கால வழக்கமாகும்.202

     மாணவர்கள் தொல்காப்பியம், காக்கைபாடினியம் ஆகிய இலக்கண
நூல்களையும் பயின்றனர்.203 ஏரம்பம் என்றொரு கணித நூல்
பழந்தமிழகத்தில் வழங்கி வந்தது.204 அது இப்போது மறைந்து போயிற்று.
கணிதத்தில் மிக நுண்ணிய அளவையையும், மிகப் பெரிய அளவையையும்
கையாண்டு வந்தனர். மிக நுண்ணிய நீட்டலளவைக்குத் தேர்த்துகள் என்று
பெயர். இருண்ட அறையொன்றன் கூரையினின்றும் பாயும் ஞாயிற்றின்
கதிரொளியில் மிதந்தோடும் துகள் எட்டுக் கொண்டது ஒரு தேர்த்துகளாகும்.
மிகப் பெரிய எண் வெள்ளம் என்பது. மக்களுக்கு வானவியல் புலமையும்
இருந்தது. வானவியல் புலவர்கட்குக் கணிகள் என்று பெயர்.205 கோள்கள்,
அவற்றின் செலவுகள், நாண்மீன்கள், திங்களின் இயக்கம் ஆகியவற்றை
அவர்கள் அறிவர். நாண்மீன்களுக்கும் கோள்களுக்கும் திங்கள்கட்கும் தூய
தமிழ்ப் பெயர் வழங்கிவருவதனின்றும் பழந்தமிழரின் வானவியல் அறிவின்
விரிவை நன்கு உணரலாம்.206 ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்,
வெள்ளி, சனி, இராகு, கேது ஆகியவற்றைக் கோள்கள் எனக்
கூறுகின்றோம்.207 இக் காலத்து வானவியலார் ஞாயிற்றையும், திங்களையும்,
இராகு கேதுக்களையும் கோள்களின் பட்டியலினின்றும் நீக்கிவிடுவர். எஞ்சிய
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி இவ் வைந்தையும் பழந்தமிழர்
கோள்களின் கணக்கில் சேர்த்துக்கொண்டனர். நாம் வசிக்கும் இவ்வுலகமும்
ஒரு கோள்தான் என்னும் உண்மையை அவர்கள் அறிந்தனர் அல்லர்.
ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயரமைப்பைக் கண்டு வியவாமல்
இருக்க முடியாது. தமிழரின் ஆண்டானது கதிரவனின் செலவைக் கணக்கிட்டு
அறுதியிடப்பட்டது. எனவே ஓராண்டில் பன்னிரண்டு திங்கள்கட்குமேலே
இரா. ஆனால், சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு அமைந்த ஆண்டில்
பன்னிரண்டு திங்கள்கட்கு மேலும் வருவதுமுண்டு; மற்றும் ஒரே மாதம்
ஓராண்டில் இரட்டித்து வருவதுமுண்டு ; இக் குழப்பங்கள் தமிழரின் ஆண்டுக்
கணக்கில் வருவதில்லை. சூரியன் எந்த இராசியில் எத்தனை நாள்
நிற்கின்றதோ அத்தனை நாள் அந்த இராசி

     202. பட்டினப். 169-71
     203. தொல். பொருள். 650 (நச்சி)
     204. குறள். 392 (பரி. உரை)
     205. புறம். 229.
     206. புறம். 20, 30; பதிற்றுப், 14:-4
     207. தேவாரம், 2 : 85 : 9