| காட்டாகச் சித்திரை நாண்மீனில் நிலவு முழுமையடையும் திங்களுக்குச் சித்திரை என்று பெயர். விசாகத்தில் சந்திரன் முழுமதியாகும் மாதத்துக்கு வைகாசி என்று பெயர். தமிழர் சோதிடக்கலையிலும் வல்லுநராகக் காணப்பட்டனர். கோள்கள், மீன்கள் ஆகியவற்றின் நிலைகளைக் கொண்டு வருங்கால நிகழ்ச்சிகளைக் ‘கணிகர்’ கணித்துக்கூறுவர். குலங்கள் தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயினர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக் குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக் கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓருறுப்பாகவே செயற்பட்டு வந்தது. பார்ப்பனர்கள் யாகம் செய்தார்கள். தம் மனைவியர் துணை புரிய அவர்கள் அறவாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.208 ‘அந்தணர் என்போர் அறவோர், மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்’ என்று திருவள்ளுவர் அந்தணருக்கு அறம் வகுத்தார்.209 களவு வாழ்க்கையில் தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் முற்றுப்பெறுவதற்குப் பார்ப்பார் துணை நிற்பர். அவர்கள் அருள் நிறைந்த அறவாழ்க்கை வாழ்ந்து வந்ததால் அரசனுக்கும் குடிமக்களுக்கும் அவர்கள்பால் நல்ல ஈடுபாடு இருந்து வந்தது. மன்னர்கள் அயல்நாட்டின் மேல் போர் தொடுக்கும்போது முதலில் பார்ப்பனரை ஊரை விட்டுப் போய்விடும்படி முன்னறிவிப்புச் செய்தல் போர் அறமாக இருந்தது.210 கண்ணகியும் மதுரையின்மேல் தீயை ஏவும்போது பார்ப்பனர்மீது செல்லவேண்டா என்று அத்தீயினுக்குக் கட்டளையிட்டாள்.211 பண்டைய தமிழகத்துப் பார்ப்பனர் தம்மைத் தமிழராகவே நினைந்து, தமிழ் பயின்று, 208. புறம். 166. 209. குறள். 30. 210. புறம். 9. 211. சிலப். 21 : 53. |