பக்கம் எண் :

162தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

தமிழ்ச் சமுதாயத்தில் தாமும் இன்றியமையாத ஓர் உறுப்பாய் அமையுமாறு
நடந்துகொண்டனர் ; சமயக் கல்வி, தத்துவம் ஆகியவற்றில் வல்லுநராக
இருந்தனர். கபிலரைப் போன்ற பார்ப்பனப் புலவர்கள் சங்கப் புலவர்களாய்
விளங்கினர். பார்ப்பனருள் சிலர் மக்கள் வெறுப்புக்கு இலக்கான
வாழ்க்கையும் வாழ்ந்து வந்தனர் என அறிகின்றோம்.212

     பண்டைத் தமிழர் மக்கட்பேற்றைப் பெரிதும் பாராட்டினர். ‘அமிழ்தினும்
ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’213 என்றும், ‘குழலினிது
யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்’214 என்றும்
மக்கட்செல்வத்தைப் புகழ்ந்து பேசுகின்றார் திருவள்ளுவர். குழந்தைகளின்
குறுகுறு நடையையும், மயக்குறு தன்மையையும், குழலினும் யாழினும் இனிய
மழலைச் சொற்களையும்215 பாராட்டிய தமிழர் அவர்களை இளமையில் கல்வி
பயிற்றாமல் நடுத்தெருவில் விட்டிருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
தம்மினும் தம் மக்கள் மேலானவர்கள், அறிவுடையவர்கள் என்று கேட்டு
இன்புற விரும்பியவர்கள் தமிழர்கள்.216

மொழி

     தமிழ்மொழி சொல்வளம் நிரம்பியது; அவ் வளத்தை மேன்மேலும்
பெருக்கிக் கொள்ள வாய்ப்பையும் அளிப்பது; பேசுவதற்கு மென்மையானது,
இனிமையானது, ‘இடம்பமும், ஆரவாரமும், பிரயாசமும், பெருமறைப்பும்,
போதுபோக்கும் இல்லாதது. பயிலுதற்கும் அறிதற்கும் இலேசானது; பாடுதற்கும்
துதித்தற்கும் மிகவும் இனிமையுடையது.’217 தமிழ் எழுத்துகளின்
தோற்றத்தைப் பற்றியும் வளர்ச்சியைப் பற்றியும் ஆய்வாளரிடையே கருத்து
வேறுபாடு உண்டு. சங்ககாலத்தில் தமிழ் எழுத்துகளின் வடிவமும் ஒலியும்
எவ்வாறு இருந்தன? இந்நாள்வரை அவை மாறாமல் வழங்கி வருகின்றனவா?
அன்றி மாறுதல்கள் ஏற்றுக் கொண்டுள்ளனவா? தமிழராலேயே வளர்க்கப்
பெற்ற ஆதி எழுத்துகளிலிருந்து இன்றைய எழுத்துகள் ஒலி, வரி
வடிவங்களில் மாறிவந்தனவா? அன்றி அயல்மொழிகளின் எழுத்துகளை
ஏற்றுக்கொண்டு வளர்ந்தனவா? வெளிநாடுகளிலிருந்தோ, அன்றி
வடஇந்தியாவினின்றோ பிராமி எழுத்துத் தோன்றியதென்றும் அதனின்றும்
தமிழ் வட்டெழுத்துகள்

     212. கலித். 65.
     213. குறள், 64.
     214. குறள், 66.
     215. புறம். 188.
     216. குறள், 68.
     217. திருவருட்பா ஆறாந்திருமுறை,  சத்தியப் பெருவிண்ணப்பம், 2.