| அரசவையில் அமர்வது மரபாக இருந்துவந்தது. அரசவையில் இசை முழங்கிக்கொண்டிருக்கும்.220 சிலப்பதிகாரம் குறிப்பிடும் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் அரசனுடைய ஆணைக்கு வரம்பு விதித்தனவா, அன்றி அறவுரைகள் மட்டும் எடுத்துக்கூறி அரசனுக்கு அறிவுறுத்தும் உரிமையைச் செலுத்தி வந்தனவா என்பது விளங்கவில்லை. மன்னனின் அரசியலுக்கு விதிகள் வகுத்துள்ள திருக்குறளிலும் இவ்விரு நிறுவனங்களைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அரசர்கள் அவையில் அமைச்சர்களும் பங்கு கொண்டிருந்தனர். தேவையானபோது அவர்கள் மன்னனுக்கு அறவுரைகளை இடித்து எடுத்துக் கூறும் உரிமைகளைப் பெற்றிருந்தனர். ஆனால், தம் நோக்கத்தின்படியே செயல்புரியும் உரிமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை; அரசனுடைய ‘தேர்ச்சித் துணை’யாகவே இயங்கி வந்தனர்.221 ஊராண்மையும் நாட்டாண்மையும் குழுக்கள்பால் ஒப்படைக்கப்பட்டிருந்தன. சங்க கால ஆட்சி முறை சங்க காலத்தில் மன்னனாட்சியே நிலவியது. அக்கால அரசர்களில் தலைசிறந்தவராகிய சேர சோழ பாண்டியர்கள் மூவேந்தர்களெனவும் மற்ற அரசர்கள் மன்னர்களெனவும் சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அத்தகைய சிற்றரசர்களாகிய மன்னர் பலர் ஆட்சி புரிந்ததாகவும் அறிகிறோம். அதியமான் நெடுமான் அஞ்சி, பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், நள்ளி முதலியோர் இச் சிற்றரசருள் சிலராவர். தமிழகத்தில் முதன்முதலாக எப்பொழுது அரசர்களுடைய ஆட்சி தோன்றியதெனத் திட்டவட்டமாகக் கூற இயலாது. திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், உலகம் தோன்றிய காலம் தொட்டே சேர சோழ பாண்டியராகிய மூவேந்தரும் ஆட்சிபுரிந்து வந்தனரெனக் கூறியிருப்பது மிகைப்பட்டதென்பதற்கு ஐயமில்லை. அவர் கூறியிருப்பதன் கருத்து, மூவேந்தர்களும் நெடுங்காலமாகவே அரசாண்டு வந்தனரென்பதே ஆகும். முதன் முதலாக அரசன் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்று சிலர் ஆய்ந்துள்ளனர். ‘கோன்’ என்னும் சொல் அரசனைக் 220. மலைபடு. 39-40 221. குறள். 635. |