| குறித்தது. ஆனால், முல்லை நிலத்தில் ஆடு மாடுகளைக் காப்பவனையும் ‘கோன்’ என்னும் சொல் குறிப்பிட்டது. ஆகவே, முல்லைநிலப் பகுதியிலே தான் முதன்முதலாக அரசன் தோன்றியிருக்கலாமென்பது சிலர் கருத்து. இதுபற்றி முடிவாகக் கூறுவதற்கில்லை. சேரநாட்டில் மன்னனின் அடையாளமாக இருந்தது வில் என்பதை இங்கு எண்ணும்போது ஆதியில் வேடனாக இருந்தவன் நாளடைவில் மன்னனாகத் திகழ்ந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. பொதுவாகக் கூறுமிடத்து, கூட்டம் கூட்டமாக வாழ்ந்தவருள் தலைமை நிலைமையை எய்தியிருந்தவர் அரசராக உருவெடுத்தாரெனக் கொள்ளலாம். சங்க காலத்திற்கு முன்னதாகவே அரசாட்சி தலைமுறை தலைமுறையாகத் தகப்பன் பின் மைந்தன் அரசனாகும் முறை அமைந்திருக்க வேண்டும். மன்னனின் மூத்த மகனே அம் மன்னனாட்சியைத் தொடர்ந்து நடத்தும் உரிமை பெற்றிருந்தான். சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த புதல்வன் செங்குட்டுவன் அரசு கட்டில் ஏறுவதற்குத் தகுதியற்றவன் என்று கணி கூறியதன் விளைவாகக் குடும்பச் சச்சரவு நேரிடாமலிருக்கும் பொருட்டு இளையவன் (இளங்கோ) துறவி யாயினான் என்பது பற்றி அறிகிறோம். இதிலிருந்து மூத்த புதல்வனே அரச பதவிக்கு உரியவன் என்று கருதப் பட்டமை புலனாகும். இளைய அரசகுமாரர்களுக்கு இளங்கோ, இளங்கோசர், இளஞ்செழியன், இளஞ்சேரல், இளவெளிமான், இளவிச்சிக்கோன் போன்ற பெயர்கள் வழக்கிலிருந்தன. சங்க காலத்திலேயே சேர மன்னரிடை மருமக்கள் தாயமுறை வழக்கிலிருந்ததா என்ற ஐயப்பாடு தோன்றியுள்ளது. ஆனால், ஆழ்ந்து ஆராய்ந்தால் அவ்வழக்கம் மிகப் பிற்காலத்திலேயேதான் வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. சங்க காலத்திய அரசாட்சி, செங்கோலாட்சியாகவே எப்போதும் விளங்கியதாவென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை. ஆனால் அக்காலக் கொள்கைப்படி அரசர்கள் நீதி, நற்குணம் ஆகிய பண்பாடுகள் அமைந்தவர்களாகவே இருந்தனரெனக் கருதலாம். சிலர் கொடுங்கோல் மன்னர்களாகவும் ஆட்சி புரிந்திருக்கக்கூடும். செங்கோலாட்சியின் மேன்மையை எடுத்து விளக்கும் திருவள்ளுவர், கொடுங்கோன்மை பற்றியும் நன்கு விளக்கியுள்ளார். |