| அரசனுக்கு உதவி புரிய அமைச்சர்கள் இருந்தனரென்பதற்கு ஐயமில்லை. தலைமை அமைச்சரும் அவருடன் இணைந்து ஒத்துழைக்கும் பல அலுவலாளர்களும் இருந்தனர். பொதுவாகவே அவர்கள் கற்றறிந்தவர்களாகவும் திறமை வாய்ந்தவர்களாகவும் திகழ்ந்தனரெனக் கருதலாம். பண்டைய நூல்கள் சிலவற்றில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகிய கூட்டத்தினரைப் பற்றி அறிகிறோம். மதுரைக் காஞ்சியிலும் பிற்காலத்தைச் சார்ந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூல்களிலும் அவை பற்றிக் கூறப்பட்டுள்ளன. மதுரைக்காஞ்சியில் (510) நாற்பெருங்குழுவைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். இவற்றின் அமைப்பு, பொறுப்புகள், உரிமைகள்பற்றிக் கருத்து வேற்றுமைகள் காணப்படுகின்றன. சில சங்க நூல்கள் இக் குழுக்களைப் பற்றிக் கூறவேயில்லை. திருக்குறளில் இக் குழுக்களைப்பற்றி எதையும் காணோம். எட்டுத் தொகையிலும் தொல்காப்பியத்திலும் இவைபற்றிய குறிப்பொன்றுமில்லை. ஆனால், இதிலிருந்து இக் குழுக்கள் மிகப் பிற்காலத்தவை யென்ற முடிவுக்கு வரமுடியாது. இவற்றின் உறுப்பினர்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலிருந்து குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் இக் குழுக்களில் இருந்தனரெனத் தெரிகிறது. ஐம்பெருங்குழு உறுப்பினர்கள் கீழ்க் குறிக்கப்படுவோர் ஆவர்: (1) புரோகிதர் (2) படைத்தலைவர் (3) தூதுவர் (4) ஒற்றர் (5) அமைச்சர். எண்பேராயத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு : (1) கரணத்தியலவர் அதாவது அரசு கணக்கர்கள் (2) கருமகாரர் அல்லது செயலர் (3) கனகச் சுற்றம் அதாவது அரசியல் கஜானா அலுவலர் |