| (4) கடைகாப்பாளர் அதாவது அரண்மனை காப்போர் (5) நகரமாந்தர் அதாவது நகரில் வாழும் மக்களில் சிறந்த தலைவர்கள் (6) படைத்தலைவர் (காலாட்படையின் தலைவர்கள்) (7) யானை வீரர் (யானைப்படைத் தலைவர்கள்) (8) இவுளி மறவர் அதாவது குதிரைப் படையின் தலைவர்கள். இவருள் மிகப்பலரும் அரசாங்கத்தின் அலுவலர்கள் என்பது தெளிவு; நகரமாந்தர் எனப்பட்டோரை மக்களின் தலைவர்களாகவும் கருதலாம். ஆனால், மக்களின் எல்லாத் தலைவர்களும் இக் குழுவில் இருந்தனரெனத் திட்டமாய்க் கூறுவதற்கில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவருமில்லை. ஆயினும் இக் குழுக்களிலிருந்த மற்ற அலுவலர்களைப் போலல்லாது இவர்கள் மக்களின் பொதுப் பிரதிநிதிகள் எனக் கருதலாம். இக் குழுக்களுக்குக் கூட்டுப் பொறுப்பு இருந்ததெனக் கூறுவதற்கும் இடமில்லை. பொதுவாக அவரவருக்கு அளிக்கப்பட்டிருந்த துறைகளின் பொறுப்புகளை அவர்கள் பார்த்து வந்தனர். பொதுவாக அரசு எவ்விதம் நடைபெற்று வந்தது. மக்கள் நலம் எவ்விதம் கருதப்பட்டுவந்தது என்பது மன்னனைப் பொறுத்தே இருந்தது. உண்மையும், மக்கள்பால் வாஞ்சையுமுடைய அரசர் இடைவிடாது செயலாற்றி வந்தனர். ஒற்றர்கள் வாயிலாக மக்கள் நிலையை அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியாற்றி வந்தனர். ஒற்றர்கள் மீது வேறு ஒற்றர்களையும் ஏவி உண்மையை அறிந்து வந்தனர். சங்க நூல்களிலிருந்து பொதுவாக மன்னர்கள் மக்கள் நல்வாழ்வுக்காக அரும்பாடு பட்டனர் என்றே கூறலாம். ஊராட்சி எக்காலத்திலும் பாரதநாட்டில் அடிப்படையாயிருந்தவை சிற்றூர்களே. பண்டைத் தமிழகத்திலும் அஃது அவ்விதமே இருந்தது விந்தையன்று. ஆகவே, ஊராட்சி பற்றி அறிவது மிகத் தேவை. பிற்காலம், குறிப்பாகச் சோழப்பேரரசு காலத்தில் ஓங்கி வளர்ந்த ஊராட்சிக்கு வழிகோலியாயிருந்தது சங்ககால வழக்கமேயாகும். ஊர்களில் கூடின கூட்டத்திற்கு மன்றம், பொதியில், அம்பலம், அவை என்னும் பெயர்கள் விளங்கியிருந்தனவாகப் |