பக்கம் எண் :

களப்பிரர்கள் 187

நெருங்கி நின்று, பூசலின்றி, இணைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால்,
சமயவாதிகளுக்குள் சொற்போர்கள் அவ்வப்போது ஆங்காங்கு நிகழ்வதுண்டு.
குண்டலகேசி என்னும் பௌத்த காவியமும் நீலகேசி என்னும் சமண
காவியமும் இதை உறுதிப்படுத்துகின்றன. வஞ்சிமாநகரில் சமயக் கணக்கர்
பலர் தத்தம் திறங்களை எடுத்துக் கூற மணிமேகலை அவற்றை எல்லாம்
கேட்டதாகத் தெரிகின்றது. இளம் பெண்துறவி ஒருத்தியின் முன்பு தத்துவ
அறிவிற் சிறந்த பல்சமயச் சான்றோர் ஓரவையில் அமர்ந்து தத்தம் சமயக்
கருத்துகளை எடுத்து வாதித்தார்கள் என்பதிலிருந்து அக் காலத்து மக்களின்
அறிவின் உயர்ச்சியும், பண்பாட்டின் மேம்பாடும் தெற்றென விளங்குகின்றன.
களப்பிரர் காலத்தில் வழங்கி வந்த பல்வேறுபட்ட சமயங்களுள் சிறப்பானவை
வைதிகம், சைவம், பிரமவாதம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம்,
பௌதிகம் அல்லது உலோகாயதம் என்பன.8 இச் சமயங்களை வளர்த்த
அறிஞர்கள் வாய்ப்பு நேர்ந்தபோது தத்தம் கொள்கைகளை மக்களுக்கு
எடுத்து விளக்கி வந்தனர். எனினும், சமயப் போர்கள் ஏதும் நிகழவில்லை.

     பௌத்தர்கள் கடவுள் ஒருவர் உளர் என்னும் கொள்கையை
ஒப்புக்கொள்ளுவதில்லை. இக் காரணம் ஒன்றே பௌத்தத்துக்கு
வேர்கொல்லியாக மாறிற்று. சமணர்கள் அருகனைக் கடவுளாக வழிபட்டனர்.
சமணக் கொள்கைகளை விளக்கக்கூடிய பல நூல்களை இவர்கள் தமிழிலேயே
இயற்றிப் பொதுமக்கள், மன்னர்கள் ஆகிய அனைவருடைய கருத்தையும்
கவர்ந்தனர். பௌத்தர்களைப் போலவே சமணரும் கொல்லாமையாகிய
நோன்பை மேற்கொண்டவர்கள் எனினும் இவர்கள் வைதிகச் சமயத்துடனும்
தொடர்புகொண்டு பௌத்தத்துக்கு மாறான சில வைதிகக் கொள்கைகளையும்
சமணத்தில் ஏற்றுக்கொண்டனர். வாசுதேவனையும் பலதேவனையும் தம்
தெய்வ வரிசையில் இவர்கள் சேர்த்துக் கொண்டனர். திருமகள் வழிபாடும்
இவர்கட்கு உடம்பாடாக இருந்தது. சமணருக்கும் பௌத்தருக்கும் இடையிட்ட
கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி பூசல்கள்
நேர்ந்தன. அவற்றில் சமணரின் கை ஓங்கி வந்தது. பௌத்தர்கள் காஞ்சிபுரம்,
காவிரிப்பூம்பட்டினம் போன்ற பெரிய நகரங்களில் மட்டும் விகாரைகள்
அமைத்துச் சமயப்பணி செய்து வந்தனர். ஆனால் சமணரோ நகரங்களிலும்,
நாட்டுப்புறங்களிலும், மலைக்குகைகளிலும், காடுகளிலும் படர்ந்து
சென்றுஎண்ணற்ற சமணப்பள்ளிகள் நிறுவியும்,

     8. மணிமே. 27