பக்கம் எண் :

188தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

தமிழில் அரிய இலக்கிய இலக்கணங்கள் இயற்றியும் பொதுமக்களுடன்
மிகநெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர். இக் காரணத்தால்
பௌத்தத்தின் செல்வாக்குக் குறைந்துகொண்டே வந்து இறுதியில் அச்
சமயமானது நாட்டினின்றும் ஒருங்கே மறைந்து போகுமளவுக்கு அதன் நிலை
குன்றிவிட்டது. பின்னர்ப் போட்டியில் எஞ்சி நின்ற சமணம் ஒன்றே
சைவத்தையும் வைணத்தையும் தனித்து நின்று எதிர்த்துப் போராட வேண்டிய
நெருக்கடி நிலை ஏற்பட்டு விட்டது. பௌத்தர் ஒருவர் மறைமுகமாகச்
சிவனை வழிபட்டதாகவும் பெரியபுராணம் கூறுகின்றது.9

     சிவன் வழிபாடு தொன்றுதொட்டே தமிழகத்தில் வழங்கி வருகின்றது.
சிவனையே முழுமுதற் கடவுளாகப் பண்டைய தமிழர் வழிபட்டுவந்தனர் எனச்
சங்க இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. பல இடங்களில் சிவனுக்குக்
கோயில்கள் எழுந்தன. சிவனைப் பற்றிய புராண வழக்குகள் அத்தனையும்
தமிழகத்தில் அப்போதே பரவிவிட்டன. சைவ வழிபாட்டில் அடிப்படையான
கொள்கைகள் சில உண்டு. அவை : ஒருவன் செய்கின்ற வினை, வினையைச்
செய்கின்றவன், செய்த வினையால் அவனுக்கு நேரிடும் விளைவுகள்,
வினைபுரிபவனையும் அவன் புரியும் வினையின் பயனையும் ஒன்று கூட்டும்
கடவுள் ஆகிய நான்கு மெய்ப்பொருள்கள் ஆகும். சிவன் வழிபாடும்,
ஊழ்வினையில் ஆழ்ந்த உடன்பாடும் தமிழ்நாட்டில் ஊறிப்
போயிருந்தமையால் கடவுள் இல்லை என்று திட்ட வட்டமாகக் கூறிய
பௌத்த சமயத்துக்குச் செல்வாக்குக் குன்றிவந்ததில் வியப்பேதுமில்லை.
அஃதுடன் பௌத்த சமயத் தலைவனான அச்சுத விக்கிராந்தன் கடுங்கோன்
எனற் பாண்டியனாலும், சிம்ம விஷ்ணு என்ற பல்லவ மன்னனாலும்
ஒறுக்கப்பட்டு அவனுடைய ஆட்சிக்கு ஒரு முடிவு ஏற்பட்ட பிறகு
பௌத்தத்துக்கு வெகு விரைவாக இறங்குமுகம் ஏற்பட்டு வந்தது.

     9. பெரிய பு. சாக்கிய நாயனார். 4.