10. பல்லவர்கள் இந்தியாவிலேயே மிகச் சிறந்த நகரங்களாக விளங்கியவை ஏழு என்பர். அவற்றுள் சிறந்தோங்கி வருவது காஞ்சிபுரமாகும். பண்டைய புகழினும், கல்வி, கலை, சமய தத்துவங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் மேம்பட்டு விளங்குவது இந் நகரம். இங்குக் காணப்படும் நூற்றுக்கணக்கான கோயில்களும், குளங்களும் மறைந்துபோன பேரரசுகளையும், பேரரசர்களையும் நினைவூட்டுகின்றன. காஞ்சிமாநகரம் ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுக் காலம், கி.பி. மூன்று முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில், பல்லவரின் ஆட்சியில் இருந்துவந்தது. சென்ற ஐம்பது ஆண்டுகளாகவே பல்லவர்கள், யார், எங்கிருந்து வந்தவர்கள் என்னும் ஆய்வு வரலாற்று ஆராய்ச்சியாளரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. எனினும், அவர்களுக்குள் உடம்பாடான முடிவு ஒன்றும் ஏற்படவில்லை. பல்லவர்கள் ஆதியில் வாழ்ந்த இடம் இன்னதென்பதும், தமிழகத்துக்கு எப்படி வந்தனர் என்பதும் இன்னும் மறைபொருளாகவே இருந்துவருகின்றன. சங்க இலக்கியத்தில் பல்லவரைப் பற்றிய குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை. ஆனால், பல்லவர்கள் எழுதி வைத்துச் சென்ற கல்வெட்டுகள், எழுதிக் கொடுத்துள்ள செப்பேடுகள் ஆகியவற்றைக்கொண்டு அவர்களைப் பற்றிய வரலாற்றை ஒருவாறு கோவை செய்துகொள்ளலாம். பல்லவர்களுடைய கல்வெட்டுகள் மகேந்திரவாடி, தளவானூர், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி, திருக்கழுக்குன்றம், வல்லம், மாமண்டூர், மண்டகப்பட்டு, சித்தன்னவாசல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர்கள் முதன்முதல் பிராகிருத மொழியில் சாசனங்களைப் பொறித்து வந்தனர் (கி. பி. 250-350). பிறகு சமஸ்கிருத மொழியில் செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் பொறிக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர். கி. பி. 7ஆம் நூற்றாண்டில் கிரந்த-தமிழ் எழுத்தில் எழுதப்பட்டன. பல்லவரின் அரசியல் முறைகள் ஆதியில் சாதவாகனரின் அரசியல் முறைகளுடனும், கௌடிலியரின் அர்த்தசாத்திரக் |