கோட்பாடுகளுடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. பல்லவருடைய பண்பாடுகள் பலவும் தமிழ் மன்னருடைய பண்பாடுகட்கு முற்றிலும் முரண்பாடாகக் காணப்பட்டன. அவர்கள் வடமொழியையே போற்றி வளர்த்தனர். இக் காரணங்களைக் கொண்டு பல்லவர் பரம்பரையின் தொடக்கம் தமிழகத்துக்குப் புறம்பாக ஏற்பட்டிருக்கவேண்டும் என்று ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர். சாதவாகனரின் ஆட்சி குன்றிவரும்போது பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினார்கள் என்றும், அதற்கு முன்பு அவர்கள் சாகர்களுடன் இணைந்திருந்து மேற்கிந்தியப் பகுதிகளிலும், சிந்து வெளியிலும், ‘பஹ்லவர்’ அல்லது ‘பார்த்தியர்’ என்ற பெயரில் குடியேறி வாழ்ந்து வந்தார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. அப்படியாயின் அவர்கள் காஞ்சிபுரத்துக்கு ஏன் வந்தார்கள் என்னும் கேள்விக்கு விளக்கங் கிடைக்கவில்லை. பல்லவர்களுடைய கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பஹ்லவர் என்னும் சொல்லே வழங்கப்படவில்லை. பல்லவர்கள் அசுவமேத யாகம் வேட்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், பஹ்லவர்களிடம் இவ்வழக்கம் காணப்படவில்லை. அவர்கள் அந்நியப் பண்பாட்டினர். காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயிலில் யானையின் மத்தகத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட உருவம் ஒன்று மணிமுடி சூடிய கோலத்தில் தீட்டப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பல்லவர்கள் பார்த்தியர்களைச் சேர்ந்தவர்கள் எனவுங் கூறுவர். ஏனெனில், இந்தோ பாக்டிரிய மன்னனான டெமிட்டிரியஸ் என்பான் ஒருவனுடைய உருவம் அவனுடைய நாணயம் ஒன்றின்மேல் இத்தகைய முடியுடன் காட்சியளிக்கின்றது. இச் சான்று ஒன்றைமட்டுங் கொண்டு பல்லவர்கள் பார்த்தியர்களைச் சேர்ந்தவர்கள் என்று கொள்வது பொருந்தாது. பல்லவர்கள் வாகாடகர்களுள் ஒரு பிரிவினர் என்றும், வாகாடகர்களைப் போலவே பல்லவர்களும் தம்மைப் பார்த்து வாசக் கோத்திரத்தினராக கூறிக்கொள்கின்றனர் என்றும், இவர்கள் இரு பிரிவினருமே பிராமணக் குலத்தினர் என்றும், பல்லவரைச் சார்ந்த வீரகூர்ச்சா என்பான் ஒருவன் நாக கன்னிகை ஒருத்தியை மணந்தான் என்றும் கூறுவர். சோழன் வெள்வேற் கிள்ளிக்கும் பீலிவளை என்ற நாக கன்னிகைக்கும் தொண்டைமான் இளந்திரையன் பிறந்தான். அவனுடைய பெயரினால் தொண்டைமண்டலம் தோற்றுவிக்கப்பட்டது. இவ் வரலாற்றை மணிமேகலை தருகின்றது. இதனுடன் கூர்ச்சா என்பவன் நாககன்னிகைகைய மணந்த செய்தி முரண்படுகின்றது. |