பக்கம் எண் :

பல்லவர்கள் 191

தளவானூர்க் குகைக் கல்வெட்டுகளில் மகேந்திரவர்ம பல்லவனே ‘தொண்டை’
மாலை யணிந்தவன் எனக் குறிப்பிடப்படுகின்றான். பல்லவர்கள்
சாதவாகனரின்கீழ்க் குறுநில மன்னராகவும், ஆட்சி அலுவலராகவும்
செயற்பட்டு வந்தனர் என்றும், ‘பல்லவர்’ என்னும் சொல்லும் தொண்டையர்
என்னும் சொல்லும் ஒரு பொருளையே குறிக்குமென்றும், சாதவாகனப் பேரரசு
வீழ்ச்சியுற்ற பிறகு இப் பல்லவர்கள் காஞ்சிபுரத்தில் தம் பெயரில் ஆட்சிப்
பரம்பரை யொன்றைத் தொடங்கினர் என்றும், அதன் பின்னர்த்
தொண்டையர் என்னும் பெயர் மறைந்து பல்லவர் என்னும் பெயருக்கு
இடங்கொடுத்தது என்றும் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் கருதுவார்.

     பல்லவர்கள் தொண்டை மண்டலத்திலேயே தோன்றியவர்கள் என்னும்
கொள்கைக்கும் போதிய சான்றுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. மோரிய
மன்னன் அசோகனின் குடிமக்களுள் புலிந்தர் என்றோர் இனத்தவரும்
இருந்தனரென அப்பேரரசனின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அக்காலத்தில்
தொண்டை மண்டலத்தில் குறும்பர் என்ற ஓரினத்தினர் வாழ்ந்து வந்தனர்.
இவர்களே அப் புலிந்தர்கள் போலும். தொண்டை மண்டலத்தில் இரு பெரும்
கோட்டங்களில் ஒன்றுக்குப் புலி நாடு என்றும் மற்றொன்றுக்குப் புலியூர்க்
கோட்டம் என்றும் பெயர் வழங்கிற்று. வயலூர் என்ற இடத்தில்
இராசசிம்மனின் தூண் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. அக் கல்வெட்டில்
அசோகனின் முன் பரம்பரையைக் கூறிவரும்போதும் அசுவத்தாமாவின்
பெயரையடுத்தும், அசோகன் பெயருக்கு முன்பும் ‘பல்லவன்’ என்னும் ஒரு
பெயர் காணப்படுகின்றது. எனவே, அசோகனுக்கு முன்னே பல்லவப் பரம்பரை
இருந்ததாக ஊகிக்க இடமுள்ளது. அசோகனின் கல்வெட்டுகள் சிலவற்றுள்
புலிந்தர்கள் ‘பலடர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பலடர் என்னும் சொல்
காலப் போக்கில் பல்லவர் என்றும் மாறியிருக்கக் கூடும் என்றும் சிலர்
எண்ணுகின்றனர். தொண்டை மண்டலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து
கி.பி. முதல் நூற்றாண்டு வரையில் மிகவும் புகழ்பெற்று விளங்கியதற்கு
மணிமேகலை சான்று பகர்கின்றது. கரிகால் சோழன் கி.பி. இரண்டாம்
நூற்றாண்டில் பாலாற்றுக்குத் தென்புறத்திலிருந்த தொண்டை மண்டலப்
பகுதியை வென்று சோழ நாட்டுடன் இணைத்துக் கொண்டான். அப்போது
காஞ்சிபுரத்தில் வழங்கிவந்த மோரிய நிறுவனங்களை அவன் அழித்திருக்க
முடியாது. ஏனெனில், பல்லவர்கள் சாதவாகனருக்குத் திறை செலுத்தி வந்தனர்.
ஆகையால், சாதவாகனருடைய பாதுகாப்பு காஞ்சிபுரத்துக்கு