அரண் செய்தது. சாதவாகனரின் ஆட்சி கி.பி. 225-ல் வீழ்ச்சியுற்றது. அவர்களுக்குப் பின்னர்க் காஞ்சிபுரத்தில் பல்லவரே முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். நாளடைவில் அவர்களுடைய ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து வடக்கில் கிருஷ்ணா நதிவரையில் பரவிற்று. மயிதவொளு, ஹீரஹதஹள்ளி என்னும் ஊர்களில் கிடைத்துள்ள சிவஸ்கந்த வர்மனின் பிராகிருத மொழிச் செப்பேடுகளில் இதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. சாதவாகனருடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் பல்லவர்கள் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் பயிற்சி மிக்கவர்களாக இருந்தனர்; அம் மொழிகளிலேயே சாசனங்களையும் பொறித்து வைத்தனர். ஆகவே, பல்லவர்கள் சாதவாகனரின் குலத்தைச் சார்ந்தவர்கள் என ஊகிக்கவும் இடமுண்டு. சிவஸ்கந்தவர்மன் கி.பி. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சிபுரத்தினின்றும் அரசாண்டான். அப்போது அவனுடைய அரசு வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கில் தென்பெண்ணை வரையில் பரவியிருந்தது. அவன் காலத்திய சாசனங்கள் பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டன. ஸ்கந்தவர்மன் வழிவந்தவன் விஷ்ணுகோபன். அவன் ஏறத்தாழக் கி.பி. 350-375 ஆண்டுகளில் ஆட்சி புரிந்தவன். சமுத்திரகுப்தன் என்ற மோரிய மன்னனிடம் தோல்வியுண்ட பன்னிரண்டு தட்சிணாபத அரசருள் விஷ்ணுகோபனும் ஒருவன். பல்லவ சமஸ்கிருதச் செப்பேடுகளில் பதினாறு மன்னரின் பெயர்கள் காணப்படுகின்றன. அவர்கள் கி.பி. 330-575 கால அளவில் ஆண்டு வந்தவர்கள். பல்லவ மன்னர் பரம்பரையில் முன்னே கூறப்பட்ட வீரகூர்ச்சா என்பவனும், பிறகு ஸ்கந்தசிஷ்யனும் ஆண்ட காலத்தில் காஞ்சிபுரத்தில் பிராமண கடிகைகள் நடைபெற்று வந்தன. அவை பிராமணருக்கு வடமொழியையும், வேதங்களையும் பயிற்றிவந்தன. அவற்றின் நிருவாகத்தில் ஏதோ ஒழுக்கக் கேடுகள் நேர்ந்தன போலும். அரசாங்க ஆணைகட்குக் கட்டுப்படாமல் அவை எதிர்ப்புக் காட்டியிருக்க வேண்டும். அதனால் ஸ்கந்தசிஷ்யன் படைவலிமையைக் கொண்டு அவற்றைக் கைப்பற்றினான்.1 சமுத்திரகுப்தன் கைகளில் விஷ்ணுகோபன் தோல்வியுற்ற பிறகு காஞ்சிபுரத்து அரசியலில் பெருங்குழப்பமும் சிக்கல்களும் 1. S. L. I. II. P. 108 P. I I; 13. |