தாம் இழந்திருந்த செல்வாக்கைச் சிறிது சிறிதாக மீட்டுக் கொண்டு வந்தனர். இறுதியாக உறையூருக்கு அண்மையில் ஒரு குறுநில மன்னனாகக் காலங்கடத்தி வந்த விசயாலயன் வியக்கத்தக்க சோழ பரம்பரையொன்றைத் தொடங்கி வைத்தான். ரேனாண்டுச் சோழர்கள் தம் செல்வாக்குக் குன்றியிருந்த காலத்தில் சோழர்கள் காவிரிக் கரையிலேயே முடங்கிக் கிடக்கவில்லை. சோழ அரசிளங் குமரர்களுள் சிலர் சோழநாட்டை விட்டு வெளியேறித் தெலுங்கு, கன்னட நாடுகளுக்குச் சென்று குடியேறினர். அவர்களுள் வரலாற்றுச் சிறப்பெய்தியவர்கள் கடப்பை, கர்நூல், அநந்தப்பூர் மாவட்டங்களில் குடியேறிய ‘ரேனாண்டுச் சோழர்கள்’ ஆவர். அவர்களைப் பற்றி யுவான்-சுவாங் என்ற சீன வழிப் போக்கன் தன் குறிப்புகளில் கண்டுள்ளான் (கி.பி.640). அவன் அந் நாட்டைச் ‘சூளியே’ என்று குறிப்பிடுகின்றான். சூளியே என்னும் சொல் சோழயர் அல்லது சோழர் என்னும் சொல்லின் திரிபாகும். அவர்களுடைய கல்வெட்டுகளும், புண்ணியகுமாரனின் மாலேபாடு (கடப்பை மாவட்டம்) செப்பேடுகளும் கி.பி. ஏழாம் நூற்றாண்டுடன் தொடர்பு கொண்டிருப்பனவாகக் காணப்படுகின்றன. புண்ணியகுமாரனின் பரம்பரையினர் ஒரு நூற்றாண்டு ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் தாம் சோழன் கரிகாலன் பரம்பரையினர் என்று தம்மைக் கூறிக்கொண்டனர். சோழ மகாராசாக்கள் என்ற பட்டப் பெயரால் தம்மை அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். புண்ணியகுமாரனுக்குப் பின்பு அவனுடைய பரம்பரை சீர்குலைந்து தென்னிந்தியாவில் பல இடங்களில் சிதறுண்டு போயிற்று. ‘சோழ மகாராசாக்களின் சோழராச்சியம் தானியகடகத்துக்குத் தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்தது; அது 480 கல் சுற்றளவும், அதன் தலைநகரம் இரண்டு கல் சுற்றளவும் கொண்டிருந்தன. நாடுமுழுவதும் காடு மண்டிக் கிடந்தது. காற்றில் வெப்பமும் ஈரமும் மிகுதியாகக் காணப்பட்டன; மக்கள் கொடியவர்களாகவும், ஒழுக்கங் குன்றியவர்களாகவும் தென்பட்டனர். பௌத்த விகாரைகள் சிதைவுண்டு கிடந்தன. நாடெங்கும் தேவர் கோயில்கள் மலிந்து கிடந்தன. திகம்பரச் சமணர்கள் எண்ணற்றவர்கள் காணப்பட்டனர்’ என்று யுவான்-சுவாங் எழுதியுள்ளான். பாண்டியர்கள் : ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் சங்க காலத்துக்குப் பிறகு கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டுவரையில் ஆட்சி புரிந்துவந்த பாண்டிய |