வாணிகச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த மரக்கலங்கள் தமிழகத்தைச் சுற்றிக் கொண்டுதான் ஊர்ந்து செல்லவேண்டும். ஆகவே, இவ் வாணிகத்தில் தமிழகத்துக்கும் தொடர்பு ஏற்பட்டது. தமிழகத்தின் கீழைக் கடற்கரையிலும் அரபிக் கடல் ஓரத்திலும் பல துறைமுகங்கள் அமைந்திருந்தன. கேரளத்தின் கரையோரங்களில் கடல்நீர் உட்புகுந்து விரிவாகத் தேங்கியிருப்பதைக் காணலாம். இத் தேக்கங்களுக்குக் காயல்கள் என்று பெயர். அந்நிய நாட்டுக் கப்பல்கள் வந்து தங்குவதற்கு இத் துறைமுகங்களும் காயல்களும் மிகவும் வசதியாக இருந்தன. இத் துறைமுகங்கள் யாவும் சிறியவை யாகையால் இங்கச் சிறு சிறு மரக்கலங்களே நங்கூரம் பாய்ச்சலாம். சென்ற மூவாயிரம் ஆண்டுகளில் கடற்கரையோர அமைப்பில் பல புவியியல் மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. புகழ்பெற்ற பண்டைய துறைமுகங்கள் சில பிற்காலத்தில் அழிந்துபோயின; சில தம் சிறப்பில் குன்றிவிட்டன. பண்டைய துறைமுகங்களான காயலும் கொற்கையும் இப்போது மணல்மேடிட்டுக் கிடக்கின்றன ; கடல் விலகிச் சென்றுவிட்டது. பூம்புகார் கடலில் மூழ்கி விட்டது. மாபெரும் நகரம் செழித்தோங்கி இருந்த அந்த இடத்தில் இப்போது மீனவர்கள் குப்பங்களே எஞ்சியுள்ளன. தமிழக அரசு இதைச் சிறப்பாகப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பல்லவர் காலந் தொடங்கிப் பல நூற்றாண்டுகள்வரை மாமல்லபுரம் மிகப்பெரிய துறைமுகமாக விளங்கி வந்தது. பிறகு அது பொலிவிழந்து அழிந்து போயிற்று. கேரளக் கடற்கரையில் நீண்ட காலம் வாணிகக் கப்பல்கள் வந்து தங்குவதற்கு இசைவாக இலங்கிய வைக்கரையும், முசிறியும், தொண்டியும் பிற்பட்டு அழிந்து மறைந்துவிட்டன. இலங்கைத் தீவு, மாலத் தீவுகள், இப்போது பர்மா, மலேசியா, இந்தோனேசியா என்னும் பெயரில் வழங்கும் நாடுகள், சீயம் (தற்காலத் தாய்லாந்து), காம்போசம், சீனம் ஆகிய நாடுகளுடன் தமிழகம் மிக நெருங்கிய வாணித் தொடர்பும் வரலாற்றுத் தொடர்பும் கொண்டிருந்தது. தமிழகத்தில் எல்லைகள் அவ்வப்போது மாறுபட்டு வந்துள்ளன. ஆதிகாலத்தில், அதாவது தலைச்சங்க காலத்தில், தமிழகம் தென்கடலுக்கப்பாலும், தொலை தூரம் பரவி இருந்தது என்று கூறும் சில குறிப்புகள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. அப்படிப் பரவியிருந்த நிலப்பகுதி மட்டும் நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாம். ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் தமிழ் இலக்கண |