பக்கம் எண் :

22தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

நூலின் உரையாசிரியர் இப்பெயர்களைத் தம் உரையில் கொடுத்துள்ளார்.3
இப்போது வழக்கில் உள்ள தமிழ் இலக்கணங்களில் மிகவும் பழமையானதாகக்
கருதப்படுவது தொல்காப்பியமாகும். மொழிக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் ஓர்
இலக்கணத்தை, அதாவது ‘கையாளும் அழகை அல்லது நெறியை’ வகுப்பது
இந் நூல். இதற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியவர் பனம்பாரனார் என்பார்.
இவர் தொல்காப்பியருடன் ஒரே பள்ளியில் மாணவராகப் பயின்றவர் என்பர்.
இவருடைய சிறப்புப் பாயிரத்தில் தமிழ்நாட்டின் எல்லைகள்
குறிக்கப்பட்டுள்ளன. ‘வடவேங்கடம் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு
நல்லுலகம்’4 என்று இவர் தமிழகத்தின் எல்லையை விளக்குகின்றார்.
தமிழகத்தின் கிழக்கிலும் மேற்கிலும் கடல் சூழ்ந்துள்ளது. எனவே இவ்விரு
திசைகளிலும் நாட்டின் எல்லையைப் பனம்பாரனார் எடுத்துக் கூறவில்லை.
ஆனால் வடஎல்லையையும் தென்னெல்லையையும் மட்டும் அவர் கூறுவதில்
பொருள் உண்டு. ‘கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின், தெற்கும்
எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின்
கூறப்படாவாயின’ என்று இளம்பூரணர் விளக்கம் தருகின்றார்.
தொல்காப்பியத்தின் உரையாசிரியர்களுள் இவரும் ஒருவர். பிற மொழி
வழங்கும் நிலப் பகுதியிலிருந்து தமிழ் வழங்கும் நிலத்தினைப் பிரித்து
உணர்த்துதற் பொருட்டே ‘வடவேங்கடம் தென்குமரி’ என்று பனம்பாரனார்
பாயிரம் வகுத்தார் என்பது இளம்பூரணரின் கொள்கை. ஒரு நாட்டுக்கு
அகப்பாட்டு எல்லை என்றும் புறப்பாட்டு எல்லை என்றும் இருவேறு
எல்லைகள் உண்டு. அகப்பாட்டு எல்லை நாட்டின் வரம்புக்கு உட்பட்டதாகும்.
புறப்பாட்டு எல்லை அவ் வரம்புக்கு அப்பாற்பட்டதாகும். பனம்பாரனார்
கூறும் எல்லைகளான வேங்கடமும் தென்குமரியாறும் அகப்பாட்டெல்லைகள்
என்பது இளம்பூரணரின் கருத்து. ஆகவே, வேங்கடத்துக்கு வடக்கும்,
குமரிக்குத் தெற்கும் சில நிலப்பகுதிகள் அமைந்திருந்தன எனக் கருதவும்
இடமேற்படுகின்றது. குமரியாற்றுக்குப் புறம்பாய் விரிந்து கிடந்த தென்னிலப்
பகுதிக்குக் குறும்பனை நாடு என்று பெயருண்டு என்றும், செந்தமிழல்லாத
திரிந்த தமிழ் அங்கு வழங்கி வந்ததால் குறும்பனை நாட்டைப் பனம்பாரனார்
தமிழ்நாட்டு எல்லைக்குப் புறம்பாக ஒதுக்கினார் என்றும், ‘கடல்
கொள்ளப்படுவதன் முன்பு பிற நாடும் உண்மையின், தெற்கும் எல்லை
கூறப்பட்டது’ என்றும் இவ்வுரையாசிரியர்

    3. இறையனார் அகப்பொருள் பாயிரம் உரை.
    4. தொல், சிறப்புப் பாயிரம்.